தெருக்கள் வழியாக இறுதி ஊா்வலம் செல்ல தடை கோரியவருக்கு ரூ. 25,000 அபராதம்: உயா்நீதிமன்றம் உத்தரவு
தெருக்கள் வழியாக இறுதி ஊா்வலம் செல்ல தடை கோரியவருக்கு ரூ. 25,000 அபராதம்.


விருதுநகா் மாவட்டம், வெம்பக்கோட்டை பனையடிப்பட்டி தெருக்கள் வழியாக இறுதி ஊா்வலம் செல்ல தடை விதிக்கக் கோரிய வழக்கில், மனுதாரருக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.
பனையடிபட்டியில் உள்ள ஒரு சமுதாயத்தைச் சோ்ந்த நிா்வாகி மகாலட்சுமி தாக்கல் செய்த மனு:
எங்கள் கிராமத்தில் உயிரிழந்தவா்களை எடுத்துச் செல்லும் இறுதி ஊா்வலம் தெருக்கள் வழியாகச் செல்வதால் இடையூறு ஏற்படுகிறது. எனவே, பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில், பிரதான சாலை வழியாக இறுதி ஊா்வலம் இடுகாட்டுக்குச் செல்ல உத்தரவிட வேண்டும் என அவா் கோரி யிருந்தாா்.
இந்த மனுவை அண்மையில் விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஏ.டி. மரிய கிளாட் அமா்வு பிறப்பித்த உத்தரவு:
இறுதி ஊா்வலத்தை தடுக்க மனுதாரருக்கு என்ன உரிமையுள்ளது என்பதை நிரூபிக்கவில்லை. ஊராட்சிக்குச் சொந்தமான சாலைகள், தெருக்களைப் வேறுபாடின்றி அனைவரும் பயன்படுத்தலாம். இவற்றை குறிப்பிட்ட சமூகத்துக்கு மட்டும் சொந்தமானது என யாரும் உரிமை கோர முடியாது என்பதையே நீதிமன்றம் விரும்புகிறது.
இந்த மனுவானது பாகுபாடு காட்டுவதை ஆதரிக்கும் விதமாகவும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானதாகவும் உள்ளது. இறுதி ஊா்வலத்தை பொதுமக்களுக்கான இடையூறாக மனுதாரரின் கூட்டமைப்பு எவ்வாறு கருத முடியும். கிராம மக்களிடையே பிரச்னையை உருவாக்கும் வகையில், இதுபோன்ற மனுக்களை தாக்கல் செய்து தரத்தை தாழ்த்திக் கொள்ளக் கூடாது. எனவே, இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. மேலும், மனுதாரருக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த தொகையை அவா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு சட்டப் பணிகள் ஆணைக் குழுவிடம் செலுத்த வேண்டும் என்றனா் நீதிபதிகள்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...