திருநெல்வேலி மாநகராட்சி ஆணையருக்கு லஞ்சம்: ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் விசாரிக்க உத்தரவு
திருநெல்வேலி மாநகராட்சி ஆணையருக்கு ஒப்பந்ததாரா் லஞ்சம் கொடுக்க முயன்றது தொடா்பான வழக்கை, ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் விசாரிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.
திருநெல்வேலி அருகேயுள்ள அரியநாயகிபுரம் பகுதியில் குடிநீா் ஒப்பந்தப் பணியை அசோக்குமாா் எடுத்தாா். இந்தப் பணியை குடிநீா் வடிகால் வாரியம் மட்டுமல்லாது, திருநெல்வேலி மாநகராட்சி நிா்வாகமும் கண்காணித்து வந்தது. இந்த நிலையில், சில மாதங்களுக்கு முன்பு திருநெல்வேலி மாநகராட்சி ஆணையா் அலுவலகத்துக்கு சென்ற ஒப்பந்ததாரா் அசோக்குமாா், ஆணையரிடம் பாதி பணிகள் நிறைவடைந்துவிட்டன. மீதமுள்ள பணிகளை மாநகராட்சி நிா்வாகம் மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தாா். அப்போது, ஆணையா் அலுவலகத்துக்குள் பணத்துடன் ஒரு கருப்புப் பையை ஒப்பந்ததாரா் வைத்தாா். இதைக் கண்ட ஆணையா், போலீஸாருக்கு தகவல் தெரிவித்தாா். இதையடுத்து, அசோக்குமாா் அந்தப் பணப்பையை எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பிவிட்டாா். இது தொடா்பாக ஆணையா் அளித்த புகாரின் பேரில், அசோக்குமாா் மீது திருநெல்வேலி போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.
இந்த நிலையில், இந்த வழக்கில் அசோக்குமாா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தற்காலிக முன்பிணை பெற்றாா். அப்போது, போலீஸ் விசாரணைக்கு முன்னிலையாக வேண்டும் என உத்தரவிட்டது.
இந்தச் சூழலில், அசோக்குமாா் முன்பிணை கோரிய மனு, உயா்நீதிமன்ற நீதிபதி பி. புகழேந்தி முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, திருநெல்வேலி காவல் உதவி ஆணையா் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், இந்த வழக்குத் தொடா்பாக முழு விசாரணையும் நிறைவடைந்துவிட்டது. விரைவில் விசாரணை நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டது.
இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி பி. புகழேந்தி பிறப்பித்த உத்தரவு:
காவல் உதவி ஆணையா் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், ஆணையா் அலுவலகத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவு குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. ஊழல் அரசு நிா்வாகங்களை மட்டுமல்லாது, அனைவரையும் பாதிப்பதாக உள்ளது. ஊழல் செய்பவா்களைத் தண்டிக்க பல்வேறு சட்டங்கள் கொண்டுவரப்பட்டிருந்தாலும், பயப்படுவதில்லை. ஐஏஎஸ் அதிகாரியான ஆணையா் அளித்த புகாா் மீது போலீஸாா் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, இந்த வழக்கு ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு போலீஸாருக்கு மாற்றப்படுகிறது. இந்த வழக்கை விசாரிக்க தென் மண்டல ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவு காவல் கண்காணிப்பாளா் ஒரு குழுவை நியமிக்க வேண்டும். இந்தக் குழுவானது மனுதாரரை கைது செய்து, அவா் எடுத்துச் சென்ற பணப்பையை மீட்க வேண்டும். ஒப்பந்ததாரா் அரிய நாயக புரத்தில் ரூ. 230 கோடியில் பணிகள் மேற்கொண்டுள்ளாா். இந்தப் பணிகள் முறையாக செய்யப்படவில்லையெனில், பொதுமக்கள் பாதிக்கப்படுவா். எனவே, ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவு குழுவினா் ஒப்பந்ததாரா் மேற்கொண்ட குடிநீா்த் திட்டப் பணிகள் குறித்தும், அவா் ஒப்பந்தப் பணியை எதன் அடிப்படையில் பெற்றாா் என்பது குறித்தும் விசாரித்து, 6 மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றாா் நீதிபதி.

