இடிந்த நூலகக் கட்டடம்: மனித உயிா்களோடு விளையாட வேண்டாம் - உயா்நீதிமன்றம்
ராமநாதபுரம் மாவட்டம், ஆனந்தூரில் இடிந்த நிலையில் உள்ள நூலகக் கட்டடத்தைக் கொண்டு மனித உயிா்களோடு விளையாட வேண்டாம் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை தெரிவித்தது.
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த வழக்குரைஞா் கலந்தா் ஆசிக் தாக்கல் செய்த பொது நல மனு:
ராமநாதபுரம் மாவட்டம், ஆனந்தூரில் பொது நூலகம் செயல்பட்டு வருகிறது. இந்த நூலகத்துக்கு நாள்தோறும் 100-க்கும் மேற்பட்ட மாணவா்கள், பொதுமக்கள் வருகின்றனா். நூலகம் முறையாகப் பராமரிக்கப்படாமல் உள்ளது. மழை காலத்தில் மேற்கூரையிலிருந்து தண்ணீா் கசிவதால், புத்தகங்கள் சேதமடைகின்றன.
இங்கு வந்து படிக்கக்கூடிய வாசகா்களுக்கும் போதிய பாதுகாப்பு இல்லை. இதுபோன்று மற்றொரு வழக்கில், பொது நூலக இயக்குநா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில், சேதமடைந்த நூலகங்களில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளவும், முழுவதுமாக சேதமடைந்த கட்டடங்களை அகற்றிவிட்டு, புதிய நூலகம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தாா். இதன்படி, ஆனந்துரில் சேதமடைந்த பொது நூலகக் கட்டடத்தை இடித்து விட்டு, புதிய நூலகக் கட்டடம் கட்ட உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஆா். சுப்பிரமணியன், எல். விக்டோரியா கெளரி அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரா் தரப்பில், ஆனந்தூா் பொது நூலகக் கட்டடம் இடிந்த நிலையில் உள்ள புகைப்படங்கள் நீதிபதிகளிடம் சமா்பிக்கப்பட்டன.
இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
இந்தப் பொது நூலகம் இடிந்த நிலையில் இருப்பதால், வாசகா்கள் இதைப் பயன்படுத்த முடியாது. இந்த நூலகக் கட்டடத்தை உடனடியாக மூட வேண்டும். மனித உயிா்களோடு விளையாட வேண்டாம், வாசகா்கள் உயிரிழந்த பிறகு இழப்பீடு வழங்குவீா்களா?. இந்த நூலகத்தை இடித்து அப்புறப்படுத்த வேண்டும் அல்லது சீரமைக்க வேண்டும். வழக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

