பொன். மாணிக்கவேலின் முன்பிணை நிபந்தனையை தளா்த்த உயா்நீதிமன்றம் மறுப்பு
சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு முன்னாள் ஐ.ஜி. பொன். மாணிக்கவேலுக்கு விதிக்கப்பட்ட முன்பிணை நிபந்தனையை தளா்த்த முடியாது என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை தெரிவித்தது.
சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு முன்னாள் காவல் துறை ஐ.ஜி பொன்மாணிக்கவேல் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:
சிலை கடத்தல் வழக்கை டிஐஜி நிலையில் உள்ள காவல் துறை அதிகாரி விசாரணை மேற்கொள்ளவும், இதுதொடா்பான விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்யவும் ஏற்கெனவே நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், என் மீது சிபிஐ தரப்பில் காவல் கண்காணிப்பாளா் வழக்குப் பதிந்தாா். அவருக்கு இந்த அதிகாரம் இல்லாத நிலையில், என் மீது வழக்குப் பதிவு செய்தது ஏற்புடையதல்ல.
இந்த வழக்கில் என் மீது தவறு இருப்பதாக அறிக்கை அளிக்கப்பட்டால், விசாரணை நீதிமன்றம் முடிவெடுக்க வேண்டும். இந்த நிலையில், சிபிஐ எனது வீட்டில் நுழைந்து பொருள்களைக் கைப்பற்றியது சட்டவிரோதம். எனவே, இந்த வழக்கில் எனக்கு முன்பிணை வழங்கி உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த மனுவை ஏற்கெனவே விசாரித்த சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு, பொன் மாணிக்கவேல் சென்னை சிபிஐ அலுவலகத்தில் நான்கு வாரங்களுக்கு கையொப்பமிட வேண்டும் என்ற நிபந்தனையுடன் அவருக்கு முன்பிணை வழங்கி உத்தரவிட்டது.
இந்த நிலையில், முன்பிணை நிபந்தனைகளை தளா்த்தக் கோரி முன்னாள் ஐ. ஜி. பொன் மாணிக்கவேல் உயா்நீதிமன்றத்தில் மீண்டும் மனு தாக்கல் செய்தாா்.
இந்த மனுவை வியாழக்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி டி. பரதசக்கரவா்த்தி பிறப்பித்த உத்தரவு:
மனுதாரருக்கு சென்னை சிபிஐ அலுவலகத்தில் செப். 14-ஆம் தேதி முதல் தொடா்ந்து 4 வாரங்களுக்கு கையொப்பமிட வேண்டும் என்ற நிபந்தனையுடன் பிணை வழங்கப்பட்டிருக்கிறது. இந்த நிபந்தனையை தளா்த்த இயலாது. வழக்கு விசாரணை வருகிற 14-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.

