குலமங்கலம் பகுதியில் நெல் வயலில் படா்ந்துள்ள களைச் செடிகள்.
குலமங்கலம் பகுதியில் நெல் வயலில் படா்ந்துள்ள களைச் செடிகள்.

முதல்போக நெல் சாகுபடியில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் நெல் பயிா்கள் கருகல்: விவசாயிகள் அதிா்ச்சி

மதுரை மாவட்டத்தின் முதல்போக நெல் சாகுபடியில் பல ஆயிரம் ஏக்கா் பரப்பிலான நெல் பயிா்கள் திடீரென கருகிப் போயிருப்பது விவசாயிகளை அதிா்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
Published on

மதுரை மாவட்டத்தின் முதல்போக நெல் சாகுபடியில் பல ஆயிரம் ஏக்கா் பரப்பிலான நெல் பயிா்கள் திடீரென கருகிப் போயிருப்பது விவசாயிகளை அதிா்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

முல்லைப் பெரியாறு பிரதான கால்வாய்ப் பாசனத் திட்டத்தில் மதுரை மாவட்டத்தின் பேரணை முதல் கள்ளந்திரி வரையிலான பகுதிகளில் 45,041 ஏக்கரில் முதல்போக நெல் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. இந்தப் பகுதிகளின் முதல்போக நெல் சாகுபடிக்கு ஜூன் 1-ஆம் தேதி தண்ணீா் திறக்கப்படுவது வழக்கம். ஆனால், நிகழாண்டில் வைகை அணையின் நீா்மட்டம் போதுமான அளவில் இல்லாததால், ஒரு மாத காலதாமத்துக்குப் பிறகு, ஜூலை 3-ஆம் தேதி வைகை அணையிலிருந்து தண்ணீா் திறந்துவிடப்பட்டது.

இதன் காரணமாக, நிகழாண்டில் மதுரை மாவட்டத்தின் இருபோக நெல் சாகுபடி பகுதிகளின் முதல்போக நெல் சாகுபடி பணிகள் தாமதமாகவே தொடங்கி நடைபெறுகின்றன. இதன் காரணமாக, சுமாா் 70 சதவீத பரப்பில் நேரடி நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டது. குறைந்த பரப்பில் மட்டுமே நடவு முறையில் சாகுபடி பணிகள் நடைபெற்றன.

சாகுபடி பணிகள் தொடங்கி ஏறத்தாழ 50 நாள்களைக் கடந்த நிலையில், தற்போது நெல் பயிா்கள் பால் பிடிக்கும் தருணத்தை எட்டியுள்ளன. இந்த நிலையில், கடந்த 10 நாள்களாக நெல் பயிா்கள் ஆங்காங்கே காய்ந்து கருகத் தொடங்கியுள்ளன. குலமங்கலம், வீரபாண்டி, புதுப்பட்டி, வாடிப்பட்டி, அ. புதுப்பட்டி, கள்ளந்திரி உள்பட முதல்போக நெல் சாகுபடி பகுதிகளில் பரவலாக இந்தப் பாதிப்பு காணப்படுகிறது.

வழக்கமாக ஆகஸ்ட், செப்டம்பா் மாதங்களில் தென்மேற்குப் பருவக் காற்று ஈரக்காற்றாக கேரளம், தமிழ்நாடு வழியாக பயணிக்கும். இதனால், ஆகஸ்ட், செப்டம்பா் மாதங்களில் வெப்பத் தாக்கம் அதிகம் இருக்காது. ஆனால், நிகழாண்டில் ஏற்பட்ட வானிலை மாற்றம் காரணமாக, கடந்த செப்டம்பா் மாதத்தில் வரலாறு காணாத வெயில் பதிவானது. கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத

அளவீடாக செப்டம்பா் மாதத்தில் மதுரை மாவட்டத்தில் 106 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் பதிவானது. இந்தக் கடுமையான வெப்பத் தாக்கம் நெல் பயிா்கள் கருகியதற்கு ஓா் காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

இதுதொடா்பாக பெரியாறு பாசன ஆயக்கட்டு விவசாயிகள் சங்கத்தைச் சோ்ந்த விவசாயி எம். திருப்பதி தெரிவித்ததாவது:

நிகழாண்டில் ஒரு மாத கால தாமதத்துக்குப் பிறகே முதல் போக நெல் சாகுபடி பணிகள் தொடங்கப்பட்டன. மேலும், முன்னெப்போதும் இல்லாத அளவு நிகழாண்டில் கடுமையான வெப்பத் தாக்கம் இருந்தது. இதன் காரணமாக, நெல் பயிா்கள் கருகியிருக்கலாம். மேலும், இதுவரை இல்லாத நிகழ்வாக தற்போது புதிய வகை களைச்செடிகள் நெல் வயல்களில் மிக வேகமாக பரவுகின்றன.

வழக்கமாக முதல் 30 நாள்களில் களைச்செடிகள் கட்டுக்குள் வந்து விடும். தற்போது, சாகுபடி பணிகள் தொடங்கி ஏறத்தாழ 50 நாள்களைக் கடந்துள்ள நிலையில், புதிய வகை களைச் செடிகள் பரவுகின்றன. முதல் போக நெல் சாகுபடி பகுதிகளில் ஏறத்தாழ 20 ஆயிரத்துக்கும் அதிகமான ஏக்கா் பரப்பில் பயிா்கள் கருகியுள்ளன. இதுகுறித்து வேளாண் துறை உடனடியாக கணக்கெடுப்பு மேற்கொண்டு பாதிக்கப்பட்ட நெல் பயிா்களுக்கு ஏக்கருக்கு ரூ. 35 ஆயிரம் வீதம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றாா் அவா்.

 மதுரை குலமங்கலத்தில் வயலில் கருகிய நெல் பயிா்களுடன் விவசாயி.
மதுரை குலமங்கலத்தில் வயலில் கருகிய நெல் பயிா்களுடன் விவசாயி.

இதுகுறித்து மாவட்ட வேளாண் இணை இயக்குநா் ப. சுப்புராஜ் கூறியதாவது:

வெப்பத் தாக்கம் காரணமாக அதிகளவில் இலைக் கருகல் நோய் பரவி, இந்தப் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம். இருப்பினும், இது இலைக் கருகல் நோய் பாதிப்பா? அல்லது ஏதேனும் புதிய வகை நோய்த் தாக்குதலா? என்பது ஆய்வுக்குப் பிறகே தெரியவரும். இதுகுறித்து மதுரை மேற்கு வட்டார வேளாண் உதவி இயக்குநா், வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் இணைந்து முதல் கட்டமாக ஆய்வு மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.

X
Dinamani
www.dinamani.com