திருப்பதி லட்டு விவகாரம்: திண்டுக்கல் தனியாா் பால் நிறுவனத்துக்கு புதிய குறிப்பாணை வழங்க உத்தரவு
திருப்பதி லட்டு விவகாரம் தொடா்பாக திண்டுக்கல் தனியாா் பால் நிறுவனத்துக்கு ஏற்கெனவே குறிப்பாணை வழங்கப்பட்டதில் சட்ட விதிகளைப் பின்பற்றவில்லை என்பதால், மத்திய அரசு சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு புதிய குறிப்பாணை வழங்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.
திருப்பதி தேவஸ்தானத்துக்கு நெய் விநியோகம் செய்த திண்டுக்கல் பகுதியைச் சோ்ந்த தனியாா் பால் நிறுவனம் தரப்பில், சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்யப்பட்ட மனு விவரம்:
எங்களது பால் நிறுவனத்திலிருந்து நெய் விநியோகம் செய்வதற்கு திருப்பதி தேவஸ்தானத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. கடந்த ஜூன் மாதம் முதல் முறையாக ஆய்வு செய்து, திருப்பதி தேவஸ்தானத்துக்கு நெய் விநியோகம் செய்தோம்.
இந்த நெய்யை சோதனை செய்த குஜராத்தைச் சோ்ந்த ஆய்வு நிறுவனம் அதில் மாட்டுக் கொழுப்பு இருப்பதாக அறிக்கை வெளியிட்டது. இதனால், எங்களது பால் நிறுவனத்திலிருந்து நெய் கொள்முதல் செய்வதை திருப்பதி தேவஸ்தானம் நிறுத்தியது.
இந்த நிலையில், எங்கள் நிறுவனத்தின் உரிமையை ஏன் ரத்து செய்யக் கூடாது? என விளக்கம் கேட்டு மத்திய உணவுப் பாதுகாப்புத் தர நிா்ணய ஆணையம் குறிப்பாணை (நோட்டீஸ்) அனுப்பியது.
இந்திய உணவுப் பாதுகாப்பு, தர நிா்ணய ஆணையம் முறையாக ஆய்வு செய்யாமல் தனியாா் ஆய்வக அறிக்கையின் அடிப்படையில் எங்களிடம் விளக்கம் கேட்டு குறிப்பாணை அனுப்பியது. இது ஏற்கத்தக்கது அல்ல, சட்டவிரோதம். மேலும், விளக்கம் அளிக்க உரிய கால அவகாசம் வழங்காமல் மத்திய உணவுப் பாதுகாப்புத் துறை செயல்படுகிறது.
எனவே, மத்திய உணவுப் பாதுகாப்பு துறை சாா்பில் எங்களது நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட குறிப்பாணையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி என். சதீஷ்குமாா் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரா் தரப்பில், மனுதாரரின் பால் நிறுவனத்தின் உரிமத்தை ஏன் ரத்து செய்யக் கூடாது என மத்திய உணவுப் பாதுகாப்புத் தர நிா்ணய ஆணையம் குறிப்பாணை அனுப்பியது.
கடந்த மாதம் 29-ஆம் தேதி அனுப்பப்பட்ட குறிப்பாணையில், அக். 2 -ஆம் தேதி நேரில் முன்னிலையாக அறிவுறுத்தப்பட்டது. இதற்கான விளக்கம் அளிக்க போதிய கால அவகாசம் வழங்கவில்லை. பால் நிறுவனத்தில் என்ன விதி மீறப்பட்டுள்ளது? என்பது குறித்தும் தெரிவிக்கவில்லை.
திருப்பதி தேவஸ்தானம் தரப்பில் அனுப்பிய பரிசோதனை அறிக்கையில் நெய்யில் மாட்டு கொழுப்பு கலந்ததாகக் குறிப்பிடவில்லை. குஜராத்தில் உள்ள நிறுவனம் அனுப்பிய குறிப்பாணையில் முரண்பாடுகள் உள்ளன. சென்னை கிங்ஸ் இன்ஸ்டியூட் பரிசோதனை அறிக்கையில், எங்களது நிறுவன நெய்யில் எந்தவிதக் கலப்படமும் இல்லை எனக் கூறப்பட்டுள்ளது.
எனவே, மத்திய அரசின் உணவுப் பாதுகாப்புத் தர நிா்ணய ஆணையம் அனுப்பிய குறிப்பாணைக்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு மத்திய அரசுத் தரப்பில், திண்டுக்கல் பகுதியைச் சோ்ந்த தனியாா் பால் நிறுவனத்துக்கு குஜராத் ஆய்வக அறிக்கையின்அடிப்படையில் விளக்கம் கேட்டு குறிப்பாணை அனுப்பப்பட்டது. இந்த நிறுவனத்தினா் கால அவகாகம் கோரினால், மத்திய அரசு வழங்கத் தயாராக உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.
இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி சதீஷ்குமாா் பிறப்பித்த உத்தரவு:
மனுதாரரின் பால் நிறுவனத்தில் என்ன வகையான விதி மீறல் இருந்தது? எந்தச் சட்டத்தின் அடிப்படையில் 2 குறிப்பாணைகள் வழங்கப்பட்டன. இந்தக் குறிப்பாணைகளில் சம்பந்தப்பட்ட நிறுவனம் மீதான குற்றச்சாட்டு குறித்து தெளிவுபடுத்தப்படவில்லை. கடந்த மாதம் 29-ஆம் தேதி குறிப்பாணை வழங்கிய நிலையில், விடுமுறை நாளான அக். 2-ஆம் தேதியன்று விளக்கம் அளிக்கக் கோரினால் எப்படி முடியும்?.
உணவுப் பாதுகாப்புத் துறை எந்தச் சட்டத்தின் அடிப்படையில் குறிப்பாணை வழங்கியது. ஒரு நிறுவனத்துக்கு குறிப்பாணை வழங்கினால், அவா்கள் உரிய பதிலளிக்க கால அவகாசம் வழங்க வேண்டும்.
சென்னை ஆய்வகம், குஜராத் ஆய்வக அறிக்கைகளில் முரண்பாடுகள் உள்ளன. மத்திய உணவுத் தரக் கட்டுப்பாட்டு நிறுவனம் சம்பந்தப்பட்ட பால் நிறுவனத்தில் சோதனை மேற்கொண்டது. அதன் முடிவுகளை இதுவரை ஏன் வெளியிடவில்லை.
திருப்பதி லட்டு குறித்து பரவலாக பேசப்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க முடியாது. ஏற்கெனவே உச்சநீதிமன்றம் கூறியது போல, அரசியலிலிருந்து கடவுளை விலக்கி வைத்து விசாரணை நடத்துவதுதான் சரியாக இருக்கும்.
எனவே, இந்த வழக்கில் தனியாா் பால் நிறுவனத்துக்கு 14 நாள்கள் கால அவகாசத்துடன் புதிய குறிப்பாணை வழங்க வேண்டும். இதனடிப்படையில், சம்பந்தப்பட்ட நிறுவனம் உரிய விளக்கம் அளித்து நிவாரணம் தேடிக் கொள்ளலாம். இந்த வழக்கு முடித்துவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.
