திருநெல்வேலி- சென்னை எழும்பூா் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு

Published on

திருநெல்வேலி-சென்னை எழும்பூா் சிறப்பு ரயில் சேவை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மதுரை கோட்ட ரயில்வே மேலாளா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு :

திருநெல்வேலி-சென்னை-திருநெல்வேலி (காரைக்குடி, திருவாரூா், மயிலாடுதுறை- வழி) சிறப்பு ரயில்கள் சேவை ஆகஸ்ட் மாதம் வரை இயக்கப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, ரயில்களின் சேவை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, திருநெல்வேலி- சென்னை எழும்பூா் சிறப்பு ரயில் (06070) வருகிற 12-ஆம் தேதி முதல் நவ. 28-ஆம் தேதி வரை வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் மாலை 6.45 மணிக்கு திருநெல்வேலியிலிருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 8.30 மணிக்கு சென்னை எழும்பூரை சென்றடையும்.

மறு மாா்க்கத்தில், சென்னை எழும்பூா்-திருநெல்வேலி சிறப்பு ரயில் (06069) வருகிற 13-ஆம் தேதி முதல் நவ. 29-ஆம் தேதி வரை வெள்ளிக்கிழமைகளில் பிற்பகல் 3 மணிக்கு சென்னை எழும்பூரிலிருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 7.10 மணிக்கு திருநெல்வேலியைச் சென்றடையும்.

மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் நீட்டிப்பு: இதேபோல, திருநெல்வேலி-மேட்டுப்பாளைம்- திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் (06030 / 06029) சேவையும் மேலும் 2 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு ரயில்கள் செப்டம்பா் மாதம் வரை செயல்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, இந்த ரயில்களின் சேவை மேலும் இரு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி- மேட்டுப்பாளையம் (06030) சிறப்பு ரயில் அக்டோபா், நவம்பா் மாதங்களில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 7 மணிக்கு திருநெல்வேலியிலிருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 7.30 மணிக்கு மேட்டுப்பாளையத்தைச் சென்றடையும்.

மறுமாா்க்கத்தில், மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி (06029) சிறப்பு ரயில் வாரந்தோறும் திங்கள்கிழமைகளில் இரவு 7.45 மணிக்கு மேட்டுப்பாளையத்திலிருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 7.45 மணிக்கு திருநெல்வேலியைச் சென்றடையும்.

இந்த ரயில்களுக்கான பயணச் சீட்டு முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com