பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த தொழிலாளா்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு: அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
பட்டாசு ஆலை விபத்துகளில் உயிரிழந்த, காயமடைந்த தொழிலாளா்களின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட இழப்பீட்டுத் தொகை தொடா்பாக அரசு அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.
விருதுநகா் மாவட்டத்தைச் சோ்ந்த விஜய் தாக்கல் செய்த பொதுநல மனு:
விருதுநகா் மாவட்டத்தில் கடந்த 2021- ஆம் ஆண்டு ஸ்ரீ மாரியம்மன் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 27 போ் உயிரிழந்தனா், 30 போ் கா யமடைந்தனா். இந்த வழக்கை தேசிய பசுமை தீா்ப்பாயம் தாமாக முன் வந்து விசாரித்தது. இதில் உயிரிழந்தவா்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 20 லட்சமும், காயமடைந்த தொழிலாளா்களுக்கு ஊனத்தின் தன்மைக்கு ஏற்ப ரூ. 2 லட்சம் முதல் ரூ. 15 லட்சம் வரை இழப்பீடு வழங்க உத்தரவிட்டது. இதன்படி இந்த வெடிவிபத்தில் உயிரிழந்தவா்கள், காயமடைந்தவா்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கவில்லை. இதுகுறித்து அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே பசுமை தீா்ப்பாயத்தின் உத்தரவுப்படி, இந்த வெடிவிபத்தில் உயிரிழந்த, காயமடைந்தவா்களின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த மனுவை புதன்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஆா். சுப்பிரமணியன், எல். விக்டோரியா கௌரி அடங்கிய அமா்வு பிறப்பித்த உத்தரவு:
பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த, காயமடைந்தவா்களின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகையை வழங்கி, அது தொடா்பான அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில் தமிழக தலைமைச் செயலா் உள்பட அரசு அதிகாரிகள் நேரில் முன்னிலையாக உத்தரவிட நேரிடும். இந்த வழக்கு விசாரணை வருகிற செப். 30 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.
