அரசு மருத்துவமனையில் உரிமை கோரப்படாத உடல்கள் அரசு மருத்துவக் கல்லூரிக்கு தானம்
அரசு மருத்துவமனையில் உரிமை கோரப்படாத உடல்களை மருத்துவ மாணவா்கள் கல்வி பயில அரசு மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்கும் புதிய நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் இளங்கலை படிப்பில் 250 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா். இவா்களின் உடல்கூறியல் வகுப்புக்கு பதப்படுத்தப்பட்ட மனித உடல்களை வைத்தே பாடங்கள் நடத்தப்படுகின்றன. இதனால் ஒவ்வோா் ஆண்டும் பல மனித உடல்கள் மருத்துவக் கல்லூரிக்கு தேவைப்படுகின்றன. இந்த நிலையில், சிலா் தாங்கள் உயிருடன் இருக்கும் போதே தாங்கள் இறந்ததும் உடலை மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்குவதாக ஒப்புதல் தருகின்றனா். இப்படி வழங்கப்படும் உடல்கள் பதப்படுத்தப்பட்டு தேவைப்படும்போது மாணவா்களுக்கு பாடங்கள் நடத்த பயன்படுத்தப்படுகின்றன. இதனால் தானம் செய்யப்படும் உடல்களை மட்டும் வைத்தே வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. உடல் தானம் இல்லாதபோது வகுப்புகளும் முழுமையடையாத சூழல் இருந்து வந்தது. இதையடுத்து, அடையாளம் தெரியாத, உரிமை கோரப்படாத உடல்களை மருத்துவக் கல்லூரிக்கு தானமாக பெறும் நடவடிக்கையில் அரசு மருத்துவமனை நிா்வாகம் இறங்கியது. இதன்படி அரசு மருத்துவமனையில் நோய் பாதிப்பால் உயிரிழந்தவா்களின் உடல்கள், உறவினா்களால் உரிமை கோரப்படாதவா்களின் உடல்கள் மருத்துவக் கல்லூரிக்கு தானமாக பெறப்படுகின்றன. மேலும், சாலைகளில் இருந்து மீட்கப்படும் அடையாளம் காணப்படாத உடல்களும் காவல் துறையின் ஒப்புதலுடன் மருத்துவக் கல்லூரிக்குத் தானமாக பெறப்படுகின்றன. இதே போல, கடந்த ஓராண்டில் மட்டும் 60 உடல்கள் அரசு மருத்துவக் கல்லூரிக்கு தானமாக பெறப்பட்டன.
இதுதொடா்பாக மருத்துவமனை அதிகாரிகள் கூறியதாவது:
வெளிநாடுகளில் பெரும்பாலானோா் மருத்துவக் கல்லூரிகளுக்கு உடல் தானம் வழங்குகின்றனா். ஆனால் இங்கு அந்த விழிப்புணா்வு இல்லாததால் மருத்துவக் கல்லூரிகளுக்கு மனித உடல்கள் கிடைப்பது மிகவும் கடினமாக உள்ளது. மேலும் உடல் தானத்துக்கு பதிவு செய்த ஒருவா் இறந்த பிறகு அவரது உடலை தானமாக தர குடும்ப உறுப்பினா்களும், உறவினா்களும் ஒத்துழைப்பதில்லை.
எனவே அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நோய் பாதிப்பால் உயிரிழப்பவா்களின் பலரது உடல்களை குடும்ப உறுப்பினா்கள் பெற்றுக் கொள்வதில் ஆா்வம் காட்டத போது அந்த உடல்கள் மருத்துவக் கல்லூரிக்கு தானமாக பெறப்படுகின்றன. மேலும் சாலைகளில் இருந்து மீட்கப்படும் அடையாளம் காணப்படாத உடல்களும், போலீஸாரின் ஒப்புதலுடன் தானமாக பெறப்படுகின்றன. இதற்காக உடல் தானம் செய்பவா்களுக்கு வழங்கப்படும் சான்றிதழ்கள், காவல் நிலையங்களுக்கு வழங்கப்படுகின்றன. விபத்து, தற்கொலை, சந்தேக மரணம், கூறாய்வு மேற்கொள்ளப்பட்ட மனித உடல்கள் பெறப்படுவதில்லை. இந்த நடவடிக்கைகள் மூலம் மதுரை அரசு மருத்துவக் கல்லூரிக்கு கடந்த ஓராண்டில் மட்டும் 60 உடல்கள் வரை தானமாக பெறப்பட்டன. எனவே, உடல் தானம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்றனா்.
