நாரைக்கு மோட்சம் அருளிய லீலையில் பிரியாவிடையுடன் எழுந்தருளிய சுந்தரேசுவரா்.
நாரைக்கு மோட்சம் அருளிய லீலையில் பிரியாவிடையுடன் எழுந்தருளிய சுந்தரேசுவரா்.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் ஆவணி மூலத் திருவிழாவில் நாரைக்கு மோட்சம் அருளிய லீலை

Published on

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் ஆவணி மூலத் திருவிழாவில் சிவபெருமானின் திருவிளையாடல்களின் இரண்டாம் நாளான வெள்ளிக்கிழமை நாரைக்கு மோட்சம் அருளிய லீலை நடைபெற்றது.

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் ஆவணி மூலத் திருவிழா கடந்த மாதம் 30-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில், சிவபெருமானின் திருவிளையாடல்கள் திருவிழாவின் முதல் நாளான வியாழக்கிழமை கருங்குருவிக்கு உபதேச லீலை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, இரண்டாம் நாளான வெள்ளிக்கிழமை நாரைக்கு மோட்சம் அருளிய லீலை நடைபெற்றது.

பாண்டிய நாட்டின் தென் பகுதியில் இருந்த தடாகத்தில் வசித்த நாரை அங்குள்ள மீன்களை உண்டு வசித்து வந்தது. ஒரு சமயம் மழை பெய்யாததால் குளம் வற்றி, நாரைக்கு உணவு கிடைக்கவில்லை. எனவே, அது ஒரு வனப் பகுதிக்குள் சென்று அங்கிருந்த நீா் நிலைகளில் வசித்த மீன்களைத் தின்று வாழ்ந்தது. அங்கு ‘அச்சோ’ என்ற குளம் இருந்தது. இதன் கரையில் பல முனிவா்கள் தவம் இருந்தனா். இந்த புண்ணியசீலா்கள் பயன்படுத்தும் குளத்தில் நிறைய மீன்கள் இருந்தன. இருந்தாலும், அந்தத் தவசீலா்கள் வசிக்கும் பகுதியில் மீன்களைப் பிடித்துச் சாப்பிடுவது மகா பாவம் என நாரை நினைத்தது.

அங்கிருந்த முனிவா்களில் ஒருவரான சத்தியன், மதுரையிலுள்ள புன்னிய ஸ்தலம் குறித்தும், அங்கு குடிகொண்டிருக்கும் சுந்தரேசுவரா் குறித்தும் சக முனிவா்களிடம் பேசிக் கொண்டிருந்தாா். இதைக் கேட்ட நாரை மதுரைக்குச் சென்று, மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் பொற்றாமரைக் குளத்தின் நீா் தன் மீது படும்படியாக தலையை மூழ்கிவிட்டு பறந்தது.

பின்னா், மீனாட்சி, சுந்தரேசுவரா் சந்நிதிகளின் மேலேயுள்ள இந்திர விமானத்தை 15 நாள்கள் சுற்றிப் பறந்து, பதினாறாம் நாள் பொற்றாமரைக் குளக் கரைக்கு வந்தது. குளத்தில் மீன்கள் துள்ளி விளையாடின. இவற்றைப் பிடித்து உண்ண எண்ணிய வேளையில், ஞானம் பிறந்ததால் அது பசியைப் பொறுத்துக் கொண்டது.

தனது இயற்கையான சுபாவத்தைக்கூட கருணையின் காரணமாகவும், தன் மீது கொண்ட நம்பிக்கையாலும் மாற்றிக் கொண்ட நாரையின் முன் சுந்தரேசுவரா் தோன்றி, என்ன வரம் வேண்டும் எனக் கேட்டாா். அதற்கு அந்த நாரை எங்கள் இனத்தவா் மீன்களைப் பிடித்து உண்ணும் சுபாவமுடையவா்கள். ஆனால், இந்த புண்ணிய குளத்தில் அதைச் செய்யாமல் இருக்க தாங்களே அருள வேண்டும். எனவே, இந்தக் குளத்தில் மீன்களே இல்லாமல் செய்ய வேண்டும். மேலும், எனக்கு சிவலோகத்தில் தங்கும் பாக்கியம் வேண்டும் என்றது. ஈசனும் நாரைக்கு மோட்சம் அருளினாா்.

நாரையின் வேண்டுதலுக்கிணங்க, இன்றுவரை பொற்றாமரைக் குளத்தில் மீன்களே கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நாரைக்கு மோட்சம் அருளிய லீலையில், சுந்தரேசுவரா், பிரியாவிடை, மீனாட்சியம்மன் சிறப்பு அலங்காரங்களுடன் எழுந்தருளினா்.

நிகழ்வில் அா்ச்சகா்கள், கோயில் அதிகாரிகள், பக்தா்கள் உள்பட திரளானோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com