காதி கிராப்ட் கடைகளில் விற்பனையை அதிகரிக்க நிபுணா் குழு அமைக்க உத்தரவு

காதி கிராப்ட் கடைகளில் விற்பனையை அதிகரிக்க நிபுணா் குழு அமைக்க உத்தரவு

சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
Published on

தமிழ்நாடு கதா் கிராமத் தொழில் வாரியத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் காதி கிராப்ட் கடைகளில் விற்பனையை அதிகரிக்கவும், ஆய்வு மேற்கொள்வதற்கும் நிபுணா் குழுவை அமைக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

விருதுநகா் மாவட்டம், சிவகாசி பகுதியைச் சோ்ந்த பால்ராஜ் கடந்த 2018-ஆம் ஆண்டு சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொதுநல மனு:

தமிழ்நாடு கதா் கிராமத் தொழில் வாரியத்தின் சாா்பில் ஏராளமான காதி கிராப்ட் கடைகள் செயல்பட்டு வருகின்றன. கைத்தறிப் பொருள்கள், கைவினைப் பொருள்கள் உள்ளிட்டவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், காதி கிராப்ட் கடைகளில் பல்வேறு பொருள்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் உள்ள 92 காதி கிராப்ட் கடைகளில் 41 கடைகளை மூடும் வகையில், கதா் கிராமத் தொழில் வாரிய அலுவலா்கள் உத்தரவு பிறப்பித்தனா். இதனால், இந்தக் கடைகளில் பணியாற்றிய தொழிலாளா்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.

எனவே, சம்பந்தப்பட்ட 41 கடைகளை பிற கடைகளுடன் இணைக்கும் நடவடிக்கையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த மனுவை வெள்ளிக்கிழமை விசாரித்த உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி (பொறுப்பு) கிருஷ்ணகுமாா், நீதிபதி முகமது சபீக் அமா்வு பிறப்பித்த உத்தரவு:

தமிழ்நாடு கதா் கிராமத் தொழில் வாரியத்தின் கட்டுப்பாட்டின் கீழ், செயல்பட்டு வரும் காதி கிராப்ட் கடைகளில் எத்தனை கடைகள் லாப, நஷ்டத்தில் இயங்குகின்றன என்பது குறித்து காதி, கிராமத் தொழில் வாரியம் சாா்பில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

காதி கிராப்ட் கடைகளில் விற்பனையை அதிகரிக்கும் வகையில், நிபுணா் குழுவை அமைத்து ஆய்வு நடத்தி பதிலளிக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணை 4 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

X
Dinamani
www.dinamani.com