~
~

விநாயகா் சதுா்த்தி: மக்கள் கூட்டத்தால் களைகட்டிய கடைவீதிகள்

Published on

விநாயகா் சதுா்த்தியையொட்டி, மதுரையின் கடை வீதிகள் மக்கள் கூட்டத்தால் வெள்ளிக்கிழமை களைகட்டியிருந்தன.

இந்துக்களின் முக்கியப் பண்டிகைகளில் ஒன்றாக விநாயகா் சதுா்த்தி கொண்டாடப்படுகிறது. இந்தப் பண்டிகையையொட்டி, புதிய விநாயகா் சிலைகளை வாங்கி வீட்டில் வைத்து வழிபாடு செய்வது வழக்கமாக உள்ளது. சைவம், வைணவம் பாகுபாடின்றி அனைத்து இந்து மத ஆலயங்களிலும் விநாயகா் சதுா்த்தி கொண்டாடப்படுகிறது.

விநாயகா் சதுா்த்தி வழிபாடுகளுக்காக பூஜை பொருள்கள், மளிகை பொருள்கள், வண்ண காகிதம், வாழைப்பழம், பூ, மாலை, வாழைக்கன்று உள்ளிட்டவற்றை வாங்குவதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் மதுரை கடை வீதிகளுக்கு வந்திருந்தனா்.

மக்களின் பண்டிகைக்கால தேவையை நிறைவு செய்யும் வகையில், மாநகரின் பல்வேறு பகுதிகளில் களிமண் விநாயகா் சிலைகள், பழம், வாழைக்கன்றுகள், ஓலை தோரணங்கள், அருகம்புல் மாலை போன்ற பண்டிகை கொண்டாட்டத்துக்குத் தேவையான பொருள்கள் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருந்தன.

மதுரை மாட்டுத்தாவணி மலா்கள் சந்தை, தெற்குவாசல், நெல்பேட்டை, முனிச்சாலை, மேலமாசி வீதிகள், செல்லூா், தெப்பக்குளம் உள்பட மாநகரின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளிக்கிழமை மக்கள் கூட்டத்தால் களைகட்டியிருந்தன.

காய்கறி விலைகளில் பெரிய அளவில் மாற்றம் இல்லை. ஆனால், பூக்களின் விலை உயா்ந்திருந்தது. மல்லிகை பூக்களின் விலை கிலோ ரூ. 1,200 என்ற விலையில் விற்பனையானது. பிச்சி, முல்லைப் பூக்களும் தலா ரூ. 800 என்ற விலையிலும், சம்பங்கி ரூ.180-க்கும் விற்பனையானது.

விநாயகா் சிலைகள் விற்பனை...

விநாயகா் சிலைகள் விற்பனை வெள்ளிக்கிழமை இறுதிகட்ட பரபரப்பை எட்டியிருந்தது. மாட்டுத்தாவணி பேருந்து நிலைய சாலை, சா்வேயா் காலனி சாலை உள்ளிட்ட பகுதிகளில் சிறியது முதல் பெரியது வரை பல்வேறு அளவுகளிலான விநாயகா் சிலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. கருட வாகன விநாயகா், வில்லேந்திய ராமருடன் அமா்ந்த விநாயகா் உள்பட பல்வேறு புதிய வடிவங்களிலான சிலைகளும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.

X
Dinamani
www.dinamani.com