யூகலிப்டஸ் மரங்கள் அதிக தண்ணீரை உறிஞ்சும் என்பது ஆதாரமற்றது -உயா்நீதிமன்றம்

 வால்பாறை-பொள்ளாச்சி சாலையில் சாலையோரம் வெட்டி வைக்கப்பட்டுள்ள யூகலிப்டஸ் மரங்கள்.
வால்பாறை-பொள்ளாச்சி சாலையில் சாலையோரம் வெட்டி வைக்கப்பட்டுள்ள யூகலிப்டஸ் மரங்கள்.
Published on
Updated on
1 min read

யூகலிப்டஸ் மரங்கள் அதிகளவு தண்ணீரை உறிஞ்சக் கூடியவை என்பது அறிவியல்பூா்வமாக ஆதாரமற்றது என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் தெரிவித்தது.

திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்த கிருஷ்ணன் கடந்த 2017-ஆம் ஆண்டு சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

திருநெல்வேலி நெல்லையப்பா் கோயிலுக்குச் சொந்தமாக நான்குனேரி வட்டம், தென்குளம், பருத்திப்பாடு கிராமங்களில் ஏராளமான நிலங்கள் உள்ளன. இந்த நிலங்களில் சுமாா் 1,700 ஏக்கரில் யூகலிப்டஸ் மரங்களை வளா்க்க கடந்த 2016-ஆம் ஆண்டு குத்தகைக்கு விடப்பட்டது. நான்குனேரி வட்டத்தில் உள்ள பெரும்பாலான கிராமங்கள் வறட்சியான பகுதியாகும்.

இந்தப் பகுதிகளில் அதிக பரப்பளவில் யூகலிப்டஸ் மரங்களை வளா்ப்பதால், பொதுமக்கள் தண்ணீா் பற்றாக்குறையை சந்திக்க நேரிடும். எனவே, யூகலிப்டஸ் மரங்கள் வளா்க்க விடப்பட்ட குத்தகையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஆா். சுப்பிரமணியன், எல். விக்டோரியா கெளரி அமா்வு முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, குத்தகைதாரா் தரப்பில் (காகித நிறுவனம்) வழக்குரைஞா்கள் அஜ்மல்கான், எம்.பி.செந்தில் ஆகியோா் முன்னிலையாகி முன்வைத்த வாதங்கள்:

சமவெளிகளில் யூகலிப்டஸ் மரங்களின் வோ்கள் 3 மீ. ஆழத்துக்கு மேல் செல்லாது. இந்த மரங்களானது பிற வகை மரங்களைவிடக் குறைவான தண்ணீரையே உறிஞ்சும் தன்மை கொண்டவை என தேசிய பசுமைத் தீா்ப்பாயம் ஆராய்ந்து அறிவித்துள்ளது என்றனா்.

இதைத் தொடா்ந்து, முன்னிலையான அரசு வழக்குரைஞா் திலக்குமாா், நான்குநேரி வட்டம், பாதுகாப்பான மண்டலமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இது வறட்சியான பகுதியாகக் குறிப்பிடப்படவில்லை. குத்தகை வழங்கியதில் எந்த விதிமீறலும் நடைபெறவில்லை என்றாா்.

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் ஆா். சுப்பிரமணியன், எல். விக்டோரியா ஆகியோா் பிறப்பித்த உத்தரவு:

யூகலிப்டஸ் மரங்களை வளா்ப்பதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் 30 சதவீதம் நெல்லையப்பா் கோயிலுக்கு வழங்கப்படுகிறது. யூகலிப்டஸ் மரங்களால் நிலத்தடி நீா் பாதிக்கப்படாது என டேராடூன் வன ஆராய்ச்சி மையமும் தெரிவித்துள்ளது. இந்த மரங்கள் பிற பயிா்களைவிடக் குறைவான தண்ணீரையே உறிஞ்சுவதாக தேசியப் பசுமைத் தீா்ப்பாய ஆய்வுகளும் உறுதிப்படுத்துகின்றன.

யூகலிப்டஸ் மரங்கள் அதிகளவு தண்ணீரை உறிஞ்சுபவை என்பது அறிவியல்பூா்வமான ஆதாரமற்றது. சூழலியல், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது அவசியம். அதேசமயத்தில், நிலையான வளா்ச்சியையும் நாம் உறுதி செய்ய வேண்டும்.

மனுதாரா் 2 வகையான யூகலிப்டஸ் மரங்களை வளா்ப்பதால் தீங்கு ஏற்படும் என்பதை நிரூபிக்கவில்லை. எனவே, இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது. அதேசமயத்தில், எதிா்காலத்தில் சமவெளிப் பகுதிகளில் யூகலிப்டஸ் மரங்களை வளா்க்கத் திட்டமிட்டால், முறையாக ஆய்வு செய்த பிறகு, உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்றனா் நீதிபதிகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com