மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் ஜனவரியில் நிறைவடையும் - மத்திய அரசு தகவல்

Published on

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை முதல் கட்ட கட்டுமானப் பணிகள் அடுத்தாண்டு, ஜனவரியில் நிறைவடையும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மத்திய அரசு தெரிவித்தது.

மதுரையைச் சோ்ந்த ரமேஷ் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

மதுரை தோப்பூரில் 224.24 ஏக்கா் பரப்பளவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளதாக கடந்த 2018-ஆம் ஆண்டு, ஜூன் மாதம் அறிவிக்கப்பட்ட து. இதற்கான நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு, கடந்த 2019-ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது.

தமிழக சுகாதாரத் துறை அதிகாரிகள், மத்தியக் குழு, ஜப்பானிய நிதிக் குழுவினா் இடத்தை ஆய்வு செய்தனா். மேலும், எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தில் ரூ. 10 கோடியில் 5.50 கி.மீ. சுற்றளவுக்கு சுற்றுச்சுவா் அமைக்கும் பணி நிறைவடைந்தது.

இந்த நிலையில், எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமானப் பணிகள் மந்தகதியில் நடைபெற்று வருகிறது. எனவே, மதுரை தோப்பூா் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், மரிய கிளாட் அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, மத்திய அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணி தொடங்கி விரைவாக நடைபெற்று வருகின்றன. பல கட்டங்களாகப் பிரித்து பணிகள் நடைபெற்று வருகின்றன. முதல் கட்ட கட்டுமானப் பணிகள் அடுத்தாண்டு, ஜனவரியில் நிறைவடையும் எனத் தெரிவித்தாா்.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் விரைவாக நடைபெறுவதாக மத்திய அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஒரு மருத்துவமனையை குறிப்பிட்ட காலத்துக்குள் கட்டி முடிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட இயலாது. எனவே, வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

X
Dinamani
www.dinamani.com