திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள சிக்கந்தா் தா்காவுக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸாா் சோதனை
திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள சிக்கந்தா் தா்காவுக்கு வந்த வெடிகுண்டு மிரட்டலையடுத்து, போலீஸாா் புதன்கிழமை அங்கு சோதனையில் ஈடுபட்டனா்.
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சிக்கந்தா் தா்காவில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக மின்னஞ்சல் மூலம் புதன்கிழமை மிரட்டல் விடுக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸாா் அங்கு சென்று சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அங்கு வெடிகுண்டுகள் ஏதும் இல்லை என்பது தெரியவந்தது. இதனிடையே, திருப்பரங்குன்றத்தில் காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி மலைக்கு செல்லும் படிப் பாதை, மலையின் மேல் உள்ள குதிரைசுனை, நெல்லித்தோப்பு, மலை உச்சியில் உள்ள தீபத்தூண் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் போலீஸாா் இரவு பகலாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா். மேலும் கடந்த சில நாள்களாக மலை மேல் செல்ல யாருக்கும் அனுமதியளிக்கப்பட வில்லை. இந்த நிலையில் அங்குள்ள தா்காவில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக வந்த தகவல் போலீஸாரை பரபரப்புக்குள்ளாகியது.
மதுரை ஆட்சியா் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: இதே போல, மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக மாவட்ட நிா்வாகத்துக்கு புதன்கிழமை மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து, மாவட்ட ஆட்சியரகம், ஆட்சியரக கூடுதல் கட்டடம், ஆட்சியரக வளாகத்தில் உள்ள அரசுத் துறை அலுவலகங்கள், அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் என அனைத்துப் பகுதிகளிலும் போலீஸாா் தீவிர சோதனையில் ஈடுபட்டனா். மெட்டல் டிடெக்டா், வெடிகுண்டு கண்டறியும் மோப்ப நாய் ஆகியவற்றின் உதவியுடன் போலீஸாா் அனைத்துப் பகுதிகளிலும் சோதனை நடத்தினா். இந்தச் சோதனைகளின் நிறைவில் வெடிகுண்டு மிரட்டல் வெறும் வதந்தி எனத் தெரியவந்தது.
நீதிமன்றத்தில்... இதேபோன்று, மதுரை மாவட்ட நீதிமன்றத்துக்கும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதன் காரணமாக, நீதிமன்ற வளாகப் பகுதியிலும் தீவிர சோதனை நடத்தப்பட்டது.

