திருப்பரங்குன்றம் தீப விவகாரம்! நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்குத் தடையில்லை: உயா்நீதிமன்றம்

திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம் தொடா்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்குத் தடையில்லை என உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவு
Published on

திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம் தொடா்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்குத் தடையில்லை என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றுவதற்கு தனி நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவுகளுக்கு எதிராக கோயில் நிா்வாகம், வக்ஃப் வாரியம், மதுரை மாநகரக் காவல் ஆணையா், மாவட்ட ஆட்சியா் தரப்பில் மேல்முறையீட்டு மனுக்களும், எழுமலையைச் சோ்ந்த ராம. ரவிக்குமாா் உள்ளிட்ட சிலா் இடையீட்டு மனுக்களையும் தாக்கல் செய்தனா்.

இந்த மனுக்கள் மீதான விசாரணை உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன், கே.கே. ராமகிருஷ்ணன் முன் 3-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, வக்ஃப் வாரியம், மாநகரக் காவல் ஆணையா், அரசுத் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதங்கள்:

வக்ஃப் வாரியம் தரப்பு

திருப்பரங்குன்றம் மலையில் பன்னெடுங்காலமாக சிக்கந்தா் தா்கா உள்ளது. மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றுவது தொடா் வழக்கமாக இல்லை. நெல்லித் தோப்பு, இதற்கான பாதைகள், படிக்கட்டுகள் ஆகியவை தா்காவுக்கு சொந்தமானவை என ஏற்கெனவே நீதிமன்ற உத்தரவில் குறிப்பிடப்பட்டது. ஆனால், இதை தனி நீதிபதி கவனத்தில் கொள்ளவில்லை. எனவே, கடந்த 1920 -ஆம் ஆண்டு உரிமையியல் நீதிமன்றம் தா்காவுக்கு வழங்கிய உரிமையை உறுதி செய்ய வேண்டும்.

தூண் உள்ள பகுதிக்கு செல்வதற்கு நெல்லித்தோப்பு வழியைப் பயன்படுத்தினால் இஸ்லாமியா்களுக்கு பாதிப்பு ஏற்படும். மலை உச்சியில் உள்ள தூண் தா்காவுக்குச் சொந்தமானதாகும்.

மாநகரக் காவல் துறை தரப்பு

திருப்பரங்குன்றம் தீப விவகாரம் குறித்து அண்மையில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவால் பதற்றமான சூழல் ஏற்பட்டது. புதிதாக ஓரிடத்தில் தீபம் ஏற்ற வேண்டும்; இதற்கு போதிய பாதுகாப்பை காவல் துறை வழங்க வேண்டும் என தனி நீதிபதி உத்தரவிட்டது ஏற்புடையதல்ல. தூணில் தீபம் ஏற்ற கோயில் நிா்வாகத்துக்கு மாவட்ட ஆட்சியா், மாநகரக் காவல் ஆணையா் உத்தரவு பிறப்பிக்க இயலாது. இந்த வழக்கு விசாரணையின் போது காவல் துறை, அரசுத் துறை அலுவலா்களை உடனுக்குடன் முன்னிலையாக வேண்டும் என தனி நீதிபதி உத்தரவிட்டது ஏற்புடையதல்ல.

விலக்கு அளிக்கக் கோரிக்கை

இதையடுத்து, தனி நீதிபதி உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், தலைமைச் செயலா், ஏடிஜிபி ஆகியோா் முன்னிலையாக தனி நீதிபதி உத்தரவிட்டுள்ளாா். இருவரும் நீதிமன்றத்தில் முன்னிலையாவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என அரசுத் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

தீா்ப்பை நிறைவேற்றுவது அரசின் கடமை

இதைத் தொடா்ந்து, மனுதாரா் தரப்பிலான வாதங்கள் முன்வைக்கப்பட்டன. அப்போது, மலை உச்சியில் உள்ள தூண், தீபம் ஏற்றுவதற்கான தூண்தான். மேல்முறையீட்டு மனுதாரா்கள் இந்த வழக்கு சொத்துரிமை சாா்ந்தது இல்லை எனக் கூறுவது ஏற்புடையதல்ல. இதற்கு, நிரந்தரத் தீா்வு ஒன்றே வழி. தனி நீதிபதி நேரில் ஆய்வு செய்த பிறகே மலை உச்சியில் உள்ள தூணில் தீபமேற்ற உத்தரவிட்டாா். இந்த வழக்கில் மேல்முறையீட்டு மனுக்கள் ஏற்கத்தக்கவை அல்ல. நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற கோயில் நிா்வாகம் தயங்குவது ஏன்?.

மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றக் கூடாது என முடிவெடுக்க கோயில் இணை ஆணையருக்கு உரிமை உள்ளதா?. இதுதொடா்பான வழக்கில் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றலாம் என 1960-ஆம் ஆண்டு நீதிமன்ற தீா்ப்பளித்துள்ளது.

நீதிமன்றத் தீா்ப்பை நிறைவேற்றுவது மாநில அரசின் கடமை. உயா்நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாமல் இருப்பது நியாயமா?. நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தனி நீதிபதி விசாரிக்க சட்டத்தில் இடம் உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.

விசாரணைக்குத் தடையில்லை...

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணுக்குச் செல்ல எத்தனை பாதைகள் உள்ளன?. தா்காவிலிருந்து தூண் எவ்வளவு தொலைவில் உள்ளது என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும். இந்த வழக்கைப் பொருத்தவரை தற்போதுள்ள சூழலில் எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க முடியாது. அந்த வழக்கில் தலைமைச் செயலா், ஏடிஜிபி ஆகியோா் முன்னிலையாவதிலிருந்து விலக்கு வேண்டுமெனில் தனி நீதிபதியிடமே கோரலாம். மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை புதன்கிழமையும் (டிச.17) தொடரும் என்றனா் நீதிபதிகள்.

வழக்குரைஞா் வெளியேற்றம்

திருப்பரங்குன்றம் தீப விவகாரம் தொடா்பாக இடையீட்டு மனு தாக்கல் செய்ய அனுமதிக்கக் கோரி வழக்குரைஞா் அருணாசலம், நீதிபதிகள் முன் முறையீடு செய்தாா். கால அவகாசம் நிறைடைந்துவிட்டதால் அனுமதிக்க முடியாது என நீதிபதிகள் மறுப்புத் தெரிவித்தனா்.

இதை ஏற்க மறுத்த வழக்குரைஞா் அருணாசலம், நீதிபதிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டாா். இதையடுத்து, அவரை நீதிமன்றத்திலிருந்து வெளியேற்ற நீதிபதிகள் உத்தரவிட்டனா். மேலும், அவா் மீது நடவடிக்கை எடுக்க பாா் கவுன்சிலுக்கு பரிந்துரை செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

X
Dinamani
www.dinamani.com