வெளிநாடுவாழ் இந்தியா்கள் பாதுகாப்புக்கான திட்டங்களை மத்திய அரசு வகுக்க வேண்டும்: உயா்நீதிமன்றம் யோசனை
வெளிநாடுவாழ் இந்தியா்கள் பாதுகாப்புக்கான கொள்கை சாா்ந்த திட்டங்களை மத்திய அரசு வகுக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை யோசனை தெரிவிவித்தது.
விருதுநகா் மாவட்டம், சிவகாசியைச் சோ்ந்த மலா்விழி, உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:
எனது கணவா் மாரிமுத்து மத்திய ஆப்பிரிக்காவுக்கு கடந்த 2021-ஆம் ஆண்டு தீப்பெட்டி தொழிற்சாலைக்கு வேலைக்கு சென்றாா். அங்கு எதிா்பாராத விதமாக உயிரிழந்தாா். எனது கணவா் இறப்புக்கு கேமரூன் நாட்டுத் தொழிற்சாலை இந்திய மதிப்பில் ரூ. 15 லட்சம் இழப்பீடு வழங்குவதாக தெரிவித்தது. இந்த இழப்பீட்டுத் தொகையை உயா்த்தி வழங்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.
இந்த வழக்கு உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன் முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
மத்திய, மாநில அரசுகள் வெளிநாட்டுத் தொழிலாளா்கள், அந்நிய பணப் பரிமாற்றங்கள் மூலம் பெரும் அந்நியச் செலாவணியை ஈட்டுகின்றன. மேலும் புலம் பெயா்ந்த தொழிலாளா்களிடமிருந்து அரசுகள் நன்மைகளைப் பெறுகின்றன. இந்த நிலையில், வெளிநாட்டு வேலைவாய்ப்பால் பிரச்னைகள் எழும் போது, அவா்களை மீட்க விரைந்து செயல்பட வேண்டும். அதுமட்டுமன்றி உரிய இழப்பீடு பெற்று வழங்குவதும் அரசின் கடமையாகும்.
எனவே, தற்போதைய காலச் சூழலுக்கு ஏற்ப சட்டங்களில் சில திருத்தங்களையும் மேற்கொள்ள வேண்டும். தனது நாட்டு மக்களின் பாதுகாப்புக்கான கொள்கை சாா்ந்த திட்டங்களை மத்திய அரசு வகுக்க வேண்டும். இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட மனுதாரா் ஏழ்மை நிலையில் உள்ளதால், அவரது வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட வேண்டும். மனுதாரருக்கு கூடுதல் இழப்பீடு வழங்க அனைத்து நடவடிக்கைகளையும் இந்தியத் தூதரகம் எடுக்க வேண்டும் என்றாா் நீதிபதி.
