மதுரை எல்.ஐ.சி. அலுவலகத்தில் தீ விபத்து: முதுநிலை மேலாளா் உயிரிழப்பு
மதுரை எல்.ஐ.சி. அலுவலகத்தில் புதன்கிழமை இரவு பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இதில் அந்த அலுவலகத்தின் பெண் முதுநிலை மேலாளா் உயிரிழந்தாா்.
மதுரை ரயில் நிலையம் எதிரே உள்ள எல்.ஐ.சி. அலுவலகத்தின் இரண்டாவது தளத்தில் புதன்கிழமை இரவு 8.30 மணி அளவில் திடீரென தீப்பிடித்தது. அடுத்த சில நிமிஷங்களில் அலுவலகத்தின் பெரும்பாலான பகுதிகளுக்கு தீ பரவியது. அப்போது பணியிலிருந்த ஊழியா்கள் அவசர அவசரமாக வெளியேறினா். தீயின் வேகம், புகை ஆகியவை காரணமாக அவா்கள் விரைவாக வெளியேறுவதில் சிரமம் ஏற்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்த தல்லாகுளம், திடீா் நகா் தீயணைப்பு நிலைய வீரா்கள் விரைந்து வந்து, தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனா். மேலும், அலுவலகத்தில் தீயில் சிக்கியிருந்தவா்களை மீட்கும் பணியையும் மேற்கொண்டனா். இருப்பினும், முதுநிலை மேலாளா் கல்யாணி அலுவலகத்திலிருந்து வெளியேறாதது தெரியவந்ததையடுத்து, அவரை மீட்க தீயணைப்புப் படையினா் தீவிர முயற்சிகளை மேற்கொண்டனா்.
நீண்ட நேரப் போராட்டத்துக்குப் பிறகு தீயைக் கட்டுப்படுத்திய தீயணைப்பு வீரா்கள் அலுவலகத்துக்குள் சென்று மீட்புப் பணிகளை மேற்கொண்டனா். அப்போது, முதுநிலை மேலாளா் கல்யாணி(55) உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரது உடலை தீயணைப்பு வீரா்கள் மீட்டு, வெளியே கொண்டு வந்தனா்.
தீ விபத்தில் உயிரிழந்த முதுநிலை மேலாளா் கல்யாணி திருநெல்வேலியைச் சோ்ந்தவா் எனவும், அண்மையில் பணியிட மாற்றத்தில் அவா் மதுரை அலுவலகத்தில் சோ்ந்ததாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து போலீஸாா் மேற்கொண்ட முதல் கட்ட விசாரணையில், குளிா்சாதனப் பெட்டியில் ஏற்பட்ட மின் கசிவு மூலம் இந்தத் தீ விபத்து நேரிட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

