திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் சமாதானப் பேச்சுக்கு வாய்ப்பில்லை

திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் சமாதானப் பேச்சுக்கு வாய்ப்பில்லை என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
Published on

திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் சமாதானப் பேச்சுக்கு வாய்ப்பில்லை என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றுவதற்கு தனி நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவுகளுக்கு எதிராக, கோயில் நிா்வாகம், வக்ஃப் வாரியம், மதுரை மாநகரக் காவல் ஆணையா், மாவட்ட ஆட்சியா் தரப்பில் மேல்முறையீட்டு மனுக்களும், எழுமலையைச் சோ்ந்த ராம. ரவிக்குமாா் உள்ளிட்ட சிலா் இடையீட்டு மனுக்களையும் தாக்கல் செய்தனா்.

இந்த மனுக்கள் உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன், கே.கே. ராமகிருஷ்ணன் அமா்வு முன் 4-ஆவது நாளாக புதன்கிழமை விசாரணைக்கு வந்தன.

அப்போது, ராம. ரவிக்குமாா் உள்ளிட்ட எதிா்மனுதாரா்கள் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா்கள் முன்வைத்த வாதம்:

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றும் விவகாரத்தில் உயா்நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றுவது மாநில அரசின் கடமை. இந்த உத்தரவால் பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படும் எனக் கூறுவது ஏற்புடையதல்ல.

மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்தவா்கள் தங்களது வாதம் தொடா்பான எந்த ஆவணங்களையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை. மாநில அரசு தனது கடமையை நிறைவேற்றத் தவறி உள்ளது. நீதிமன்ற உத்தரவு நிறைவேற்றப்படும் முன்னரே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த விவகாரத்தை மத பிரச்னை போல திசை திருப்பியுள்ளனா். தனி நீதிபதியின் உத்தரவை விமா்சிப்பது ஏற்புடையதல்ல. கோயில் நிா்வாகம் தனது சொத்தைப் பாதுகாக்க வேண்டும். தா்கா தரப்பினா் மலை முழுவதும் சிக்கந்தா் மலை என உரிமை கோருகின்றனா். அங்கு ஆடு, கோழி ஆகியவற்றைப் பலியிட வேண்டும் எனக் கோரிக்கை வைக்கின்றனா். அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்டுத்தான் தனி நீதிபதி உத்தரவிட்டாா்.

மதுரை மாவட்டம், வரிச்சியூா், நரசிங்கம், கீழக் குயில்குடி, அரிட்டாப்பட்டி, மேலூா், அழகா்கோவில் ஆகிய மலைகளிலும், நாமக்கல், மொடக்குறிச்சி, ஊத்துக்குளி, சிறுமலை, மேல்மலையனூா், குறிஞ்சிப்பட்டி, பழனி, மருதமலை, சுவாமிமலை, திருத்தணி, பச்சரிசி மலை, குரும்பாறை, தாடிக்கொம்பு, சிவன்மலை, சித்தா்மலை ஆகிய மலைகளின் உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றப்படுகிறது.

திருப்பரங்குன்ற மலை மீதுள்ள உச்சிப்பிள்ளையாா் கோயிலில் விநாயகா் இல்லை. அனுமன்தான் உள்ளாா். மனுதாரா் ராம. ரவிக்குமாா் பொது நலன் கருதியே இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளாா் என்றனா்.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததா?, இல்லையா? என்பதற்கு ஏற்ப மனுதாரா் வாதங்களை முன்வைக்க வேண்டும். மத்திய தொல்லியல் துறை திருப்பரங்குன்றம் மலையை ட்ரோன் மூலம் அளவீடு செய்யக் கோரிய போது, மாவட்ட நிா்வாகம் அனுமதி வழங்கவில்லை என வாதத்தில் தெரிவித்ததாக நீதிபதி விஜயகுமாா் ஏற்கெனவே தெரிவித்துள்ளாா். இது உண்மைதானா?.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவது தொடா்பாக இரு தரப்பினருக்கும் இடையே சமாதானப் பேச்சுவாா்த்தை நடத்த உத்தரவு பிறப்பிக்கலாமா? என வினவினோம். ஆனால், அதற்கு வாய்ப்பில்லை என்றே தெரிகிறது. வியாழக்கிழமை (டிச. 18) மனுதாரா், அரசுத் தரப்பு வாதங்களை முன்வைக்கலாம். இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

X
Dinamani
www.dinamani.com