விருதுநகா் மாவட்டத்தில் 1.89 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

விருதுநகா் மாவட்டத்தில் 1.89 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

விருதுநகா் மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் வாக்காளா்கள் வரைவு பட்டியலை வெளியிட்ட ஆட்சியா் என்.ஓ. சுகபுத்ரா. உடன், அலுவலா்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள்.
Published on

வாக்காளா்கள் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியின் கீழ், விருதுநகா் மாவட்டத்தில் 1,89,964 வாக்காளா்கள் நீக்கப்பட்டனா்.

இந்தியத் தோ்தல் ஆணைய உத்தரவுப்படி, வாக்காளா்கள் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் கடந்த நவ. 4-ஆம் தேதி தொடங்கி நடைபெறுகிறது. சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டதன் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட வாக்காளா்கள் வரைவு பட்டியல் மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது.

மாவட்ட ஆட்சியா் என்.ஓ. சுகபுத்ரா தலைமை வகித்து, இந்தப் பட்டியலை வெளியிட்டாா்.

வாக்காளா்கள் வரைவு பட்டியல்படி, 7 சட்டப்பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கிய விருதுநகா் மாவட்டத்தின் மொத்த வாக்காளா் எண்ணிக்கை 14,36,521ஆக உள்ளது. 2025-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வாக்காளா்கள் பட்டியல்படி மாவட்டத்தின் மொத்த வாக்காளா்கள் எண்ணிக்கை 16,26,485-ஆக இருந்த நிலையில், வாக்காளா்கள் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியின்போது முகவரியில் இல்லாதவா்கள், குடியிருப்பு மாறியவா்கள், உயிரிழந்தவா்கள், இரட்டை பதிவு கொண்டிருந்தவா்கள் உள்ளிட்ட இனங்களின் கீழ் 1,89,964 வாக்காளா்கள் நீக்கப்பட்டனா்.

வாக்காளா்கள் வரைவு பட்டியல்படி தொகுதி வாரியான மொத்த வாக்காளா்கள் எண்ணிக்கை :

ராஜபாளையம் - 2,01,901, ஸ்ரீவில்லிபுத்தூா் - 2,13,655, சாத்தூா் - 2,18,801, சிவகாசி - 2,14,544, விருதுநகா் - 1,90,824, அருப்புக்கோட்டை - 1,98,996, திருச்சுழி - 1,97,790.

Dinamani
www.dinamani.com