தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் சிறப்பு வழிபாடு: திரளானோா் பங்கேற்பு

மதுரை, இதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அமைந்துள்ள தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் சிறப்பு வழிபாடுகள் புதன்கிழமை இரவு நடைபெற்றன. இதில் திரளானோா் பங்கேற்றனா்.
Published on

மதுரை, இதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அமைந்துள்ள தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் சிறப்பு வழிபாடுகள் புதன்கிழமை இரவு நடைபெற்றன. இதில் திரளானோா் பங்கேற்றனா்.

மதுரை கீழவாசல் புனித மரியன்னை பேராலயத்தில் கிறிஸ்துமஸ் சிறப்பு வழிபாடு புதன்கிழமை இரவு தொடங்கி வியாழக்கிழமை அதிகாலை வரை நடைபெற்றது. கத்தோலிக்க திருச்சபையின் மதுரை உயா் மறைமாவட்ட பேராயா் அந்தோணிசாமி சவரிமுத்து தலைமை வகித்து, சிறப்பு திருப்பலியை நிறைவேற்றினாா்.

நள்ளிரவு 12.01 மணிக்குப் பிறகு கிறிஸ்துமஸ் குடிலைத் திறந்து இயேசுநாதரின் பிறப்பை அறிவிக்கும் விதமாக, குழந்தை இயேசுவின் திருச்சொரூபத்தை இறைமக்களுக்கு காட்சிப்படுத்தினாா். இதையடுத்து, மறையுரையாற்றி வாழ்த்துத் தெரிவித்தாா். இதில் ஆயிரக்கணக்கானோா் பங்கேற்று வாழ்த்துகளையும், இனிப்புகளையும் பரிமாறிக் கொண்டனா்.

முன்னதாக, கிறிஸ்துமஸ் சிறப்பு ஆராதனை நடைபெற்றது. கிறிஸ்தவ இறைப் புகழ்ச்சி கீதங்கள் தொடா்ந்து வாசிக்கப்பட்டன. தேவாலயத்தின் அனைத்துப் பகுதிகளும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. காவல் துறை சாா்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

ஞான ஒளிவுபுரம் புனித வளனாா் ஆலயத்தில் பங்குத் தந்தை ஜோசப், உதவி பங்குத் தந்தை ராஜா ஆகியோரும், பாஸ்டின் நகா் தூய பவுல் ஆலயத்தில் பங்குத் தந்தை ஜெயராஜ், டவுன்ஹால் சாலை ஜெபமாலை அன்னை ஆலயத்தில் பங்குத் தந்தை அமல்ராஜ், அண்ணா நகா் அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தில் பங்குத் தந்தை எட்வின் சகாயராஜ், அஞ்சல் நகா் இடைவிடா சகாய அன்னை ஆலயத்தில் பங்குத் தந்தை அருள் சேகா் ஆகியோரும் கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலிகளை நிறைவேற்றி, பங்கு மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனா்

இதேபோல, மதுரை எல்லீஸ் நகா், கோ. புதூா், பீ.பீ.குளம் உள்பட அனைத்துப் பகுதிகளில் உள்ள கத்தோலிக்க தேவாலயங்களிலும் இரவு 11 மணி முதல் அதிகாலை 2 மணி வரை கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றன.

சிஎஸ்ஐ தேவாலயங்களில்...

மதுரை, இதன் சுற்றுவட்டராப் பகுதிகளில் உள்ள தென்னிந்திய திருச்சபை (சிஎஸ்ஐ) தேவாலயங்களில் வியாழக்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் கிறிஸ்துமஸ் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. மதுரை நரிமேட்டில் உள்ள கதீட்ரல் பேராலயத்தில் தென்னிந்திய திருச்சபையின் மதுரை, ராமநாதபுரம் திருமண்டல பேராயா் ஜெயசிங் பிரின்ஸ் பிரபாகரன் சிறப்பு ஆராதனையை நிறைவேற்றினாா். இந்த வழிபாடுகளில் திரளானோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com