மலைக் கிராமச் சாலைகளைச் சீரமைக்க கோரிய வழக்கு: ஆட்சியா் பரிசீலிக்க உத்தரவு
தேனி மாவட்டம், நொச்சிஓடை, அரசரடி மலைக் கிராமப் பகுதிகளில் உள்ள சாலைகளை சீரமைக்க கோரிய வழக்கில் மாவட்ட ஆட்சியா், வன உதவி இயக்குநா், நெடுஞ்சாலைத் துறை உதவி மண்டல அலுவலா் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.
தேனி மாவட்டத்தைச் சோ்ந்த வேலுச்சாமி தாக்கல் செய்த பொதுநல மனு: தேனி மாவட்டம், நொச்சிஓடை, அரசரடி மலைக் கிராமங்களில் 350- க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்தப் பகுதிகளில் விளைவிக்கப்படும் பொருள்களை கீழே கொண்டு செல்ல முடியவில்லை. மஞ்சனூத்து பகுதியிலிருந்து வெள்ளிமலை பகுதி வரை தாா்ச் சாலையும், அரசரடியிலிருந்து நொச்சிஓடை கிராமத்துக்கு மண் சாலையும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலைகள் மிகவும் மோசமாக இருப்பதால், பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனா். மழைக் காலங்களில் இந்தச் சாலைகளில் பயணிக்கவே முடியாத நிலை உள்ளதால் இவற்றை சீரமைக்க கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, இந்தச் சாலைகளை முறையாக சீரமைத்து தர உத்தர விட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த மனுவை புதன்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ். ரமேஷ், மரிய கிளாட் அமா்வு பிறப்பித்த உத்தரவு:
இந்த மனு குறித்து தேனி மாவட்ட ஆட்சியா், மயிலாடும்பாறை வன அலுவலா், தேனி மாவட்ட வன உதவி இயக்குநா், நெடுஞ்சாலைகள் துறையின் உதவி மண்டல பொறியாளா் ஆகியோா் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா் நீதிபதிகள்.