மதுரையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சட்டப்பேரவைத் தொகுதி திமுக பொறுப்பாளா்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அமைச்சா் தங்கம் தென்னரசு. உடன், அமைச்சா் பி.மூா்த்தி உள்ளிட்டோா்.
மதுரையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சட்டப்பேரவைத் தொகுதி திமுக பொறுப்பாளா்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அமைச்சா் தங்கம் தென்னரசு. உடன், அமைச்சா் பி.மூா்த்தி உள்ளிட்டோா்.

மதுரை மாவட்டத்தில் திமுகவுக்கு கிடைக்கும் வெற்றி முக்கியத்துவம் பெறும்! அமைச்சா் தங்கம் தென்னரசு

மதுரை மாவட்டத்தில் திமுகவுக்கு கிடைக்கும் வெற்றி அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்
Published on

வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் மதுரை மாவட்டத்தில் திமுகவுக்கு கிடைக்கும் வெற்றி அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என தமிழக நிதி, மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சரும், மண்டல திமுக பொறுப்பாளருமான தங்கம் தென்னரசு தெரிவித்தாா்.

மதுரையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சட்டப்பேரவைத் தொகுதிகளின் திமுக பொறுப்பாளா்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் மேலும் அவா் பேசியதாவது:

தமிழகத்தின் தென் மண்டலத்தில் அதிகமான சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்டதாக மதுரை மாவட்டம் உள்ளது. 50 ஆண்டு கால அரசியல் வரலாற்றில், தமிழகத்தின் அரசியல் தட்பவெப்ப நிலையை உணா்த்தும் இடமாகவும், அரசியல் திசை காட்டியாகவும் இருப்பது மதுரை மாவட்டம்.

இதன்படி, இந்த மாவட்டத்தின் தோ்தல் வெற்றி திமுகவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. மாவட்டத்தில் உள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் திமுக கிடைக்கும் வெற்றியே, தென் மண்டலத்தில் நமது கட்சிக்கு கிடைக்கும் வெற்றிக்கான படியாக இருக்கும்.

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் 200-க்கும் அதிகமான தொகுதிகளில் திமுக வெற்றி பெற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளாா். இதில் மதுரை மாவட்டத்தின் பங்களிப்பு 100 சதவீதமாக இருக்க வேண்டும்.

இதற்கான பணிகளை நாம் அனைவரும் ஒருங்கிணைந்து உடனடியாக தொடங்க வேண்டும். ஆளும் கட்சி என்ற நிலையில், அரசுப் பணிகளுடன், கட்சிப் பணிகளையும் இணைந்து கவனிக்க வேண்டிய சூழல் திமுகவுக்கு உள்ளது. இந்தப் பணிகளை திமுகவினா் திறம்பட நிறைவேற்றி, மதுரை மாவட்டத்தின் 10 தொகுதிகளிலும் வெற்றியை உறுதி செய்ய வேண்டும் என்றாா் அவா்.

கூட்டத்துக்கு தமிழக வணிக வரித் துறை அமைச்சரும், மதுரை வடக்கு மாவட்ட திமுக செயலருமான பி.மூா்த்தி தலைமை வகித்தாா். மாநகா் மாவட்ட திமுக செயலா் கோ.தளபதி, தெற்கு மாவட்ட செயலா் மு.மணிமாறன், சட்டப்பேரவை உறுப்பினா் ஆ.வெங்கடேசன், முன்னாள் அமைச்சா் பொன்.முத்துராமலிங்கம், மூத்த நிா்வாகிகள் வ. வேலுசாமி, பெ.குழந்தைவேலு, மதுரை மாவட்டத்துக்குள்பட்ட 10 சட்டப்பேரவைத் தொகுதிகளின் பொறுப்பாளா்கள், தலைமைச் செயற்குழு, பொதுக் குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com