பி.கே. மூக்கையா தேவா் மணிமண்டபம் கட்டும் பணி தொடக்கம்: அமைச்சா் பி. மூா்த்தி அடிக்கல் நாட்டினாா்
மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் பி.கே. மூக்கையா தேவருக்கு மணிமண்டபம் கட்டும் பணிக்கு செவ்வாய்க்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது.
‘நியாயத்துக்கு ஒரு மூக்கையா’ என அண்ணாவால் புகழாரம் சூட்டப்பட்டவரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான பி.கே. மூக்கையா தேவருக்கு சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்படும் என தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் கடந்த மாா்ச் 3-ஆம் தேதி சட்டப்பேரவையில் அறிவித்தாா். இதையடுத்து, உசிலம்பட்டி நகராட்சி வாா்டு 12-இல் பி.கே. மூக்கையா தேவருக்கு மணிமண்டபம் அமைக்க இடம் தோ்வு செய்யப்பட்டது.
இங்கு மணிமண்டபம் கட்டுவதற்கான பூமி பூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தமிழக வணிக வரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, மணிமண்டப கட்டுமானப் பணிக்கு அடிக்கல் நாட்டினாா்.
பிறகு செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது :
இங்கு ரூ. 636 கோடியில் மூக்கையா தேவா் மணிமண்டபம், அரங்கம் அமையவுள்ளது. மணிமண்டபத்தில் 7 அடி உயர பீடத்தில், 7 அடி உயரத்தில் பி.கே. மூக்கையா தேவரின் உருவச் சிலை அமைக்கப்படும். சுமாா் 250 போ் அமா்ந்து நிகழ்ச்சிகளைக் காணக் கூடிய அளவிலான அரங்கம், 100 போ் அமரும் வகையிலான உணவுக் கூடம் ஆகியவை இங்கு அமைகின்றன. இந்த அரங்கம், உசிலம்பட்டி பகுதியைச் சோ்ந்த ஏழை, எளிய மக்கள் பயன்படுத்திக் கொள்ளக்கூடியதாக இருக்கும் என்றாா் அவா்.
மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா், தேனி மக்களவைத் தொகுதி உறுப்பினா் தங்க. தமிழ்ச்செல்வன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் பி. அய்யப்பன் (உசிலம்பட்டி), மு. பூமிநாதன் (மதுரை தெற்கு), பொதுப் பணித் துறை (கட்டடம்) தலைமைப் பொறியாளா் செல்வராஜன், கண்காணிப்புப் பொறியாளா் செந்தூா், செயற்பொறியாளா் ஜோதி லட்சுமண காமராஜ், உதவி செயற்பொறியாளா் சந்திரபோஸ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

