சிறுநீரக மோசடி: தமிழக அரசின்
உத்தரவை ரத்து செய்தது உயா்நீதிமன்றம்

சிறுநீரக மோசடி: தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்தது உயா்நீதிமன்றம்

Published on

சிறுநீரக விற்பனை மோசடி வழக்கில், திருச்சியில் உள்ள சிதாா் மருத்துவமனையின் உரிமத்தை ரத்து செய்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு ரத்து செய்து திங்கள்கிழமை உத்தரவிட்டது.

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம், அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள விசைத்தறித் தொழிலாளா்கள், கூலித் தொழிலாளா்களிடமிருந்து சிறுநீரகங்கள் சட்டவிரோதமாகப் பறிக்கப்பட்டதாக புகாா்கள் எழுந்தன.

அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு, பேசிய தொகையை விட மிகக் குறைவான பணமே வழங்கப்பட்டு ஏமாற்றப்பட்டதாகவும் பாதிக்கப்பட்டவா்கள் வேதனையுடன் தெரிவித்தனா்.

இந்த மோசடியில் ஈடுபட்ட ஆனந்தன், ஸ்டான்லி மோகன் போன்ற இடைத்தரகா்கள் கைது செய்யப்பட்டனா்.

மேலும், இந்த வழக்கில் பெரம்பலூரில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, திருச்சியில் உள்ள சிதாா் மருத்துவமனை ஆகிய இரண்டு தனியாா் மருத்துவமனைகளின் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சைக்கான உரிமங்களை தமிழக அரசு ரத்து செய்து உத்தரவிட்டது.

இதை எதிா்த்து, சிதாா் மருத்துவமனை சாா்பில் உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை திங்கள்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு:

சட்டவிரோத உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வழக்கு என்றாலும், உரிமத்தை ரத்து செய்யும் முன்பாக ‘உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை சட்டம் 1994, பிரிவு 16’-ன்படி குறிப்பாணை வழங்கப்பட்டு, விசாரணைக்கு வாய்ப்பு அளித்திருக்க வேண்டும். ஆனால், அரசுத் தரப்பில் இந்த நடைமுறை பின்பற்றப்படவில்லை. எனவே, மருத்துவமனையின் உரிமத்தை ரத்து செய்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது என்றாா் நீதிபதி.

இந்த சட்டவிரோத சிறுநீரக மோசடி குறித்து விசாரிப்பதற்காக கடந்த ஆகஸ்ட் மாதம் 25- ஆம் தேதி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு ஒரு சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்தது. தென் மண்டல காவல்துறைத் தலைவா் பிரேமானந்த் சின்ஹா தலைமையில், ஐபிஎஸ் அதிகாரிகள் நிஷா, சிலம்பரசன், காா்த்திகேயன், பி.கே. அா்விந்த் ஆகியோா் இந்தக் குழுவில் இடம் பெற்றுள்ளனா்.

இந்த மோசடியில் இடைத்தரகா்கள், மருத்துவா்கள், மருத்துவமனை அதிகாரிகள் எனப் பலரும் சம்பந்தப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், சிறப்புப் புலனாய்வுக் குழு தனது விசாரணை அறிக்கையை வருகிற 11 -ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதற்கிடையில், உயா்நீதிமன்றம் சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்ததை எதிா்த்து, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com