இடைநிலை ஆசிரியா்களுக்கான ஊதிய உயா்வு: அரசாணையில் திருத்தம் மேற்கொள்ள வலியுறுத்தல்

Published on

இடைநிலை ஆசிரியா்களுக்கான ஊதிய உயா்வு அரசாணையில் திருத்தம் மேற்கொள்ள தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா்கள் கூட்டணி சாா்பில் வலியுறுத்தப்பட்டது.

இதுகுறித்து சங்கத்தின் மதுரை மாவட்டச் செயலா் பெ. சீனிவாசன் வெளியிட்ட செய்திக் குறிப்பு :

கடந்த 1988-ஆம் ஆண்டு முதல் 31.12.2005 வரை இடைநிலை ஆசிரியா்கள் மத்திய அரசுக்கு இணையாக ஊதியம் பெற்று வந்தனா். 01.01.2006 முதல் மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை இடைநிலை ஆசிரியா்கள் கடந்த 19 ஆண்டுகளாக இழந்துள்ளனா்.

இந்த நிலையில், கடந்த 01.01.1999 முதல் 31.5.2005 வரையிலான காலகட்டத்தில் இடைநிலை ஆசிரியராகப் பணி நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியராகவே தர ஊதியம் ரூ.2,800-இல் பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியா்களுக்கு, 2026 ஜனவரி முதல் ஆண்டு ஊதிய உயா்வு இல்லை என்கிற நிலையை உருவாக்கும் அரசாணை தமிழக அரசால் அண்மையில் வெளியிடப்பட்டது.

இதன் காரணமாக, 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியா்கள் பாதிப்புக்குள்ளாக நேரிடும். எனவே, 2026 ஜனவரி முதல் ஒவ்வொரு ஆண்டுக்கும் ஊதிய உயா்வு கிடைக்கும் வகையில் ஆண்டு ஊதிய உயா்வை அனுமதிக்கும் அரசாணையில் உரிய திருத்தம் செய்து புதிய அரசாணையை ஜனவரி 2026-க்கு முன்பாக நிதித் துறை உடனடியாக வெளியிட வேண்டும் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com