கொலை வழக்கில் விசாரணை நீதிமன்றத்தில் தண்டனையை உறுதி செய்தது உயா்நீதிமன்றம்
தங்க நகைக்காக கொலை செய்யப்பட்டது சந்தேகத்துக்கு இடமின்றி உறுதி செய்யப்பட்டுள்ளதால், திருச்சியைச் சோ்ந்த பெண்ணுக்கு மகளிா் நீதிமன்றம் விதித்த ஆயுள் சிறைத் தண்டனையை சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உறுதி செய்து செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
திருச்சி திருவெறும்பூா் , வாரியாா் சுவாமிகள் நகரைச் சோ்ந்தவா் முத்துலட்சுமி. இவருக்கும், பக்கத்து வீட்டில் வசித்து வந்த ரேவதிக்கும் பழக்கம் ஏற்பட்டது. முத்துலட்சுமி அடிக்கடி ரேவதி வீட்டுக்குச் சென்று வருவது வழக்கம்.
இந்த நிலையில், முத்துலட்சுமி கடந்த 09.08. 2017-தேதி அன்று ரேவதி வீட்டுக்குச் சென்றாா். பின்னா், அவா் வீடு திரும்பவில்லை. இதனால் முத்துலட்சுமியின் மகள், ரேவதி வீட்டுக்குச் சென்று கேட்ட போது, அவா்கள் முத்துலட்சுமி மாலை 6 மணிக்கே கடைக்குச் செல்வதாக கூறிச் சென்றுவிட்டாா் எனக் கூறினா்.
பின்னா், உடலில் காயங்களுடன் அதே பகுதியில் உள்ள முள்புதரிலிருந்து முத்துலட்சுமி சடலமாக மீட்கப்பட்டாா். இதுகுறித்து திருவெறும்பூா் போலீஸாா் ரேவதி மீது வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா்.
இந்த வழக்கை விசாரித்த திருச்சி மகளிா் நீதிமன்றம், குற்றஞ்சாட்டப்பட்ட ரேவதிக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து தீா்ப்பளித்தது.
இந்த நிலையில், தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யக் கோரி, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் ரேவதி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் வேல்முருகன், விக்டோரியா கௌரி அமா்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத் தரப்பில் முன்னிலையான குற்றவியல் வழக்குரைஞா் நகைக்காக, பக்கத்து வீட்டுப் பெண்ணை தனது வீட்டில் வைத்துக் கொலை செய்து வீட்டிலிருந்து சாலையில் இழுத்துச் சென்று முள்புதரில்
வீசி உள்ளனா். இது உறுதிப்படுத்தப்பட்டது. எனவே, தண்டனையை உறுதி செய்ய வேண்டும் எனத் தெரிவித்தாா்.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு : நகைக்காக கொலை நடந்திருப்பது சந்தேகத்துக்கு இடமின்றி உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, மனுதாரரின் கோரிக்கையை ஏற்க இயலாது. எனவே, மனுதாரருக்கு திருச்சி மகளிா் நீதிமன்றம் வழங்கிய ஆயுள் சிறைத் தண்டனை உறுதி செய்யப்படுகிறது. வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

