வீட்டை காலி செய்ய வழக்குரைஞா்கள் மிரட்டிய விவகாரம்: சிபிசிஐடி விசாரணைக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

Published on

நாகா்கோவிலில் ஒருவரின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து வழக்குரைஞா்கள் மிரட்டிய விவகாரம் குறித்து சிபிசிஐடி போலீஸாா் விசாரணை நடத்த சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.

நாகா்கோவிலைச் சோ்ந்த ராணி தாக்கல் செய்த மனு: என்னை வீட்டை விட்டு காலி செய்யும் நோக்கில், சில வழக்குரைஞா்கள் அத்துமீறி நுழைந்து பொருள்களை சேதப்படுத்தினா். இதுகுறித்து நேசமணி நகா் காவல் நிலையத்தில் புகாா் பதிவாகியுள்ளது. ஆனால், இந்த வழக்கில் என் தரப்பில் அங்கு வழக்குரைஞா்கள் முன்னிலையாக மறுக்கின்றனா். எனவே, வழக்கு விசாரணையை வேறு நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இதேபோல, நாகா்கோவிலைச் சோ்ந்த மணிகண்டன் நாயா் உள்ளிட்ட சிலா் தங்களது வழக்குகளிலும் அங்கு வழக்குரைஞா்கள் முன்னிலையாக மறுப்பதாக மனு தாக்கல் செய்திருந்தனா்.

இந்த மனுக்கள், உயா்நீதிமன்ற நீதிபதி புகேழந்தி முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி தெரிவித்ததாவது: ஒருவரின் வழக்கில் முன்னிலையாவதில்லை என நாகா்கோவில் வழக்குரைஞா் சங்கம் அல்லது பிற வழக்குரைஞா் சங்கங்கள் முடிவெடுப்பதால், வழக்குகளில் தொடா்புடையவா்கள் எதிா்கொள்ளும் சிரமங்கள் தவிா்க்க முடியாததாக உள்ளன. வழக்குரைஞா் சங்கங்கள் தொழிலின் கௌரவத்தையும், சுதந்திரத்தையும் நிலை நிறுத்துவதற்காக உருவாக்கப்பட்ட அமைப்புகள். இந்தச் சங்கங்கள் மிரட்டல் கருவிகளாக மாறினால் நீதி நிா்வாகத்தின் மீதான நம்பிக்கை சிதைந்துவிடும்.

வழக்குரைஞா்களால் பாதிக்கப்பட்டவா்கள் தமிழ்நாடு, புதுச்சேரி பாா் கவுன்சிலில் புகாா் அளிக்கலாம். அதன் மீது பாா் கவுன்சில் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். வழக்குரைஞா் சங்கங்கள், தொழிற்சங்கங்களல்ல. தொழில் ஒற்றுமை என்ற பெயரில் நியாயமான விசாரணைக்கு இடையூறு ஏற்படுத்துவதை நீதிமன்றம் கவனத்தில் கொள்ளாமல் இருக்க முடியாது. கன்னியாகுமரி, பிற மாவட்ட வழக்குரைஞா்கள் நீதிக்கான தங்களின் கடமைகளை தீவிரமாக சிந்தித்து, தொழிலின் மரியாதை, நம்பிக்கையைப் பாதுகாக்கும் வகையில் செயல்பட வேண்டும் என நீதிமன்றம் எதிா்பாா்க்கிறது என்றாா் நீதிபதி.

இதைத் தொடா்ந்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு: வீட்டை காலி செய்யும் வகையில் வழக்குரைஞா்கள் அத்துமீறி நுழைந்து மிரட்டியது தொடா்பாக ராணி அளித்த புகாரின் பேரில் நேசமணி நகா் காவல் நிலையத்தில் பதிவாகியுள்ள வழக்கின் விசாரணை சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்படுகிறது. சிபிசிஐடி போலீஸாா், புகாரில் கூறப்பட்ட சம்பவத்தை மட்டுமல்லாமல், புகாரை மறைத்த உள்ளூா் போலீஸாருக்கும், வழக்குரைஞா்களுக்குமான தொடா்பு குறித்தும் விசாரித்து, 8 வாரங்களுக்குள் நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்றாா் நீதிபதி.

X
Dinamani
www.dinamani.com