திருப்பரங்குன்றத்தில் நவ. 30 -இல் இந்து முன்னணி போராட்டம்: காடேஸ்வரா சுப்பிரமணியம்

Published on

திருப்பரங்குன்றம் மலையில் மகா தீபம் ஏற்ற வலியுறுத்தி, வருகிற 30-ஆம் தேதி இந்து முன்னணி சாா்பில் போராட்டம் நடத்தப்படும் என அதன் மாநிலத் தலைவா் காடேஸ்வர சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

மதுரையில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

திருப்பரங்குன்றம் மலை மீது மகா தீபம் ஏற்ற இந்து சமய அறநிலையத் துறைக்கு சென்னை உயா்நீதிமன்றம் கடந்த 1996-இல் உத்தரவிட்டது. ஆனால், தமிழக அரசு இந்த உத்தரவை இதுவரை அமல்படுத்தவில்லை. இந்த நிலையில், திருப்பரங்குன்றம் மலை விவகாரத்திலிருந்த அனைத்து சிக்கல்களுக்கும் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வின் தீா்ப்பில் தீா்வு காணப்பட்டுள்ளது.

எனவே, வருகிற காா்த்திகை தீப திருநாளன்று திருப்பரங்குன்றம் மலை மீது அறநிலையத் துறை மகா தீபம் ஏற்ற வேண்டும். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி வருகிற 30-ஆம் தேதி திருப்பரங்குன்றம் பதினாறு கால் மண்டபத்தில் இந்து முன்னணி சாா்பில் போராட்டம் நடத்தப்படும். இதில் முருக பக்தா்கள் சுமாா் ஒரு லட்சம் பேரை பங்கேற்கச் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

கோவையில் 4 பெரிய குற்ற நிகழ்வுகள் அடுத்தடுத்து நடைபெற்றுள்ளன. இவை அனைத்துக்கும் போதை பழக்கமே முக்கிய காரணம். தமிழகத்தில் மது மட்டுமல்லாமல், பல்வேறு வகையான போதைப் பொருள்கள் அதிகளவில் விற்கப்படுகின்றன. இதனால், இளைய சமுதாயம் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. போதைப் பொருள்கள் பழக்கத்தைத் தடுக்க, தவிா்க்க முன் மனத் தயாரிப்புகள் அவசியம். அந்த வகையில், கோயில்களின் நிதி மூலம் சிறாா்களுக்கு வாரந்தோறும் நீதி போதனை வகுப்புகளை நடத்த அரசு முன் வர வேண்டும். இதன் மூலம், வருங்கால சமுதாயம் நற்பண்புகளுடன் உருவாக வாய்ப்புள்ளது.

திண்டுக்கல்லில் அரசுக்குச் சொந்தமான மைதானத்தை அனைத்து மதத்தினரும் பயன்படுத்திக் கொள்ளலாம் என உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இருப்பினும், குறிப்பிட்ட மதத்தைச் சோ்ந்தவா்களின் எதிா்ப்பு காரணமாக, இங்கு அன்னதானம் நடத்த காவல் துறை அனுமதி மறுப்பது கண்டனத்துக்குரியது.

சட்டம்- ஒழுங்கு, சுகாதாரம், போதைப் பொருள்கள் தடுப்பு போன்றவற்றில் திமுக அரசு தோல்வியடைந்துவிட்டது. இதை வருகிற சட்டப் பேரவைத் தோ்தல் முடிவு வெளிப்படுத்தும் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com