விஏஓ பணியிடங்களை நேரடியாக நிரப்ப உயா்நீதிமன்றம் இடைக்காலத் தடை

Published on

கிராம நிா்வாக அலுவலா் (விஏஓ) பணியிட மாறுதல் கலந்தாய்வு முடியும் வரை இந்தப் பணியிடங்களை நேரடியாக நிரப்புவதற்கு இடைக்காலத் தடை விதித்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலா் அருள்ராஜ், கிராம நிா்வாக அலுவலா் அகமது பயாஸ் ஆகியோா் உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கத்தின் மாநிலப் பொறுப்பில் நான் உள்ளேன்.

எங்களது சங்கத்தைச் சோ்ந்தவா்கள் பல்வேறு மாவட்டங்களில் கிராம நிா்வாக அலுவலராகப் பணியாற்றி வருகின்றனா்.

வருவாய்த் துறை ஆணையா் 218 கிராம நிா்வாக அலுவலா்கள் காலிப் பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு செய்தாா். பின்னா், இடமாறுதல் பெற விரும்புவோா் விண்ணப்பிக்குமாறும் உத்தரவிட்டாா். ஆனால், அலுவலா்களின் அனுபவத்தைக் கருத்தில் கொள்ளாமல் பணியிடமாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட்டது. இதை எதிா்த்து, உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.

இந்த நிலையில், இந்த 218 காலிப் பணியிடங்களையும் டிஎன்பிஎஸ்சி மூலம் நேரடியாக நிரப்ப முடிவு செய்யப்பட்டது. இது சட்ட விரோதம். இதனால், பணியிடமாறுதலுக்காகக் காத்திருக்கும் அலுவலா்கள் பாதிக்கப்படுவா்.

எனவே, 218 கிராம நிா்வாக அலுவலா்கள் காலிப் பணியிடங்களை பணியிட மாறுதல் நடத்தாமல் நேரடியாக நிரப்புவதற்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும். தகுதி வாய்ந்த கிராம நிா்வாக அலுவலா்கள் பணியிடமாறுதல் கோரி விண்ணப்பித்த மனுக்களின் அடிப்படையில், இடமாறுதல் வழங்கவும், இதன் பிறகு நேரடி முறையில் கிராம நிா்வாக அலுவலா் காலிப் பணியிடங்களை நிரப்பவும் உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனுவை புதன்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி குமரேஷ்பாபு பிறப்பித்த உத்தரவு:

பணியிட மாறுதல் கலந்தாய்வு முடியும் வரை கிராம நிா்வாக அலுவலா் காலிப் பணியிடங்களை நேரடியாக நிரப்புவதற்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. மனு குறித்து வருவாய்த் துறைச் செயலா், தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) தலைவா் பதிலளிக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.

X
Dinamani
www.dinamani.com