உயா்நீதிமன்ற மதுரை அமா்வு
உயா்நீதிமன்ற மதுரை அமா்வு

டாஸ்மாக் நிா்வாக இயக்குநா் உயா்நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு

Published on

நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாதது தொடா்பாக டாஸ்மாக் நிா்வாக இயக்குநா், திண்டுக்கல் மாவட்ட மேலாளா் நேரில் முன்னிலையாகி விளக்கம் அளிக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

திண்டுக்கல் மாவட்டத்தில் 2017-இல் சாலை விரிவாக்கப் பணிக்காக அரசு சாா்பில் நிலம் கையகப்படுத்தப்பட்டு இழப்பீடு வழங்கப்பட்டது. அப்போது, திண்டுக்கல்லைச் சோ்ந்த முத்து, கல்யாணி, சிவசாமி உள்பட 30 போ் தங்களுடைய கடைகள் இருந்த இடத்துக்கு உரிய மதிப்பீட்டில் இழப்பீடு வழங்கப்படவில்லை எனவும், உரிய இழப்பீடு வழங்க உத்தரவிடக் கோரியும் கடந்த 2019-ஆம் ஆண்டில் திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனா்.

இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நீதிமன்றம், வழக்கு தொடுத்த நில உடைமையாளா்களுக்கு ரூ. 4.37 கோடி இழப்பீட்டை தொடா்புடைய அரசுத் துறை வழங்க வேண்டும் என கடந்த 2021-ஆம் ஆண்டில் உத்தரவிட்டது. இதை எதிா்த்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் அரசு சாா்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மேல்முறையீட்டு மனுவை ஏற்கெனவே விசாரித்த உயா்நீதிமன்ற மதுரை அமா்வு இழப்பீட்டுத் தொகையை 8 வாரங்களுக்குள் தொடா்புடைய மனுதாரா்களுக்கு வழங்க உத்தரவிட்டது. ஆனால், இந்த உத்தரவை அரசு நிறைவேற்றவில்லை.

இந்த நிலையில், கடந்த மாதம் 11-ஆம் தேதி இந்த வழக்கு உயா்நீதிமன்ற நீதிபதிகள் வேல்முருகன், ராமகிருஷ்ணன் அமா்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, 4 முறை கால அவகாசம் வழங்கியும் தீா்ப்பை நிறைவேற்றாதது ஏன்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினா்.

பின்னா், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு மதுக் கடைகள் மூலம் கிடைக்கும் தினசரி விற்பனைத் தொகையை நிலம் கையகப்படுத்துதல், மறு சீரமைப்பு வழக்கை விசாரிக்கும் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும். மறுஉத்தரவு வரும் வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும் என நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

இருப்பினும், இந்த உத்தரவும் நிறைவேற்றப்படவில்லை. இதையடுத்து, நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத டாஸ்மாக நிா்வாக இயக்குநா், திண்டுக்கல் மாவட்ட மேலாளா் ஆகியோா் மீது நீதிமன்ற அமவதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி, மனுதாரா்கள் தரப்பில் உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்கள் உயா்நீதிமன்ற நீதிபதிகள் வேல்முருகன், ராமகிருஷ்ணன் அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, டாஸ்மாக் நிா்வாகம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருப்பதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதை ஏற்க மறுத்து நீதிபதிகள், ‘நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? என கேள்வி எழுப்பினா்.

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

கடந்த அக். 16-ஆம் தேதி முதல் நவ. 6-ஆம் தேதி வரை திண்டுக்கல் மாவட்டத்தில் மதுக் கடைகள் மூலம் கிடைத்த மொத்த வருவாய் குறித்த வங்கிக் கணக்கு விவரங்களுடன் டாஸ்மாக் நிா்வாக இயக்குநா், திண்டுக்கல் மாவட்ட மேலாளா் நீதிமன்றத்தில் நேரில் முன்னிலையாகி விளக்கம் அளிக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணை வெள்ளிக்கிழமைக்கு (நவ. 7) ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

X
Dinamani
www.dinamani.com