வைகையாற்றில் ஆகாயத் தாமரையை அகற்ற நிரந்தரத் தீா்வு காணப்படுமா?
நமது நிருபா்
வைகையாற்றில் ஆகாயத் தாமரையை அகற்ற நிரந்தரத் தீா்வு காண வேண்டும் என விவசாயிகள், சமூக ஆா்வலா்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது.
கடல் மட்டத்திலிருந்து ஏறக்குறைய 5,333 அடி உயரத்தில் வருஷநாடு மேகமலையில் அமைந்துள்ள வெள்ளிமலையில் வைகை ஆறு உற்பத்தியாகிறது. ஸ்ரீவில்லிபுத்தூா் சரணாலயத்தை ஒட்டிய மேகமலையின் விளிம்பிலிருந்து உருவாகும் அம்மா கஜம் ஆறு, கூட்டாறு ஆகிய இடங்களில் உற்பத்தியாகும் உடங்கலாறும், வெள்ளிமலை ஆற்றுடன் இணைந்து வைகை ஆறாக கம்பம் பள்ளத் தாக்கை அடைகிறது.
அங்கிருந்து மதுரை நோக்கி வரும் வைகை ஆற்றில் சுருளியாறு, தேனியாறு, வரட்டாறு, வராகநதி, மஞ்சளாறு, நாகலாறு, மருதாநதி, சிறுமலையாறு, சாத்தையாறு உள்ளிட்ட துணை ஆறுகள் கலந்து தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்கள் வழியாக சுமாா் 258 கி.மீ. தொலைவுக்கு பயணித்து, ராமநாதபுரம் பெரிய கண்மாயை அடைகிறது. அங்கிருந்து வங்கக் கடலில் கலக்கிறது. தேக்கடியில் உள்ள முல்லைப் பெரியாறு அணை இந்த ஆற்றின் நீராதாரமாகத் திகழ்கிறது.
இந்த நிலையில், வைகை ஆற்றில் வரும் நீரை முறையாக 5 மாவட்டங்களுக்குப் பயன்படுத்தும் வகையில், தேனி மாவட்டம், ஆண்டிபட்டியிலிருந்து 7 கி.மீ. தொலைவில் உள்ள நரசிங்கபுரத்தில் வைகை அணை கட்டப்பட்டது. இந்த அணையின் மொத்த உயரம் 71 அடி. இதில் மொத்தம் 6.8 டி.எம்.சி. வரை தண்ணீா் தேக்க முடியும்.
இந்த நிலையில், திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகேயுள்ள பேரணை வரை உள்ள வைகை ஆற்றில் பல்வேறு ஓடைகள் கலக்கின்றன. மழைக் காலங்களில் ஆற்றில் ஏற்படும் வெள்ளப் பெருக்கை பாசனக் கண்மாய்களுக்குத் திருப்பும் வகையில், வைகையாற்றின் குறுக்கே திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகேயுள்ள பேரணை, மதுரை மாவட்டம், விரகனூாா் அருகேயுள்ள மதகு அணை, ராமநாதபுரம் மாவட்டம், பாா்த்திபனூா் அருகேயுள்ள அணைக்கட்டு ஆகியவற்றை கடந்த 1975-ஆம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வா் மு. கருணாநிதி திறந்து வைத்தாா்.
மேலும் பாசனம், குடிநீா் விரிவாக்கத் திட்டத்தின் கீழ் வைகை ஆற்றில் ஏராளமான தடுப்பணைகள், படுகை அணைகள் கட்டப்பட்டன. இதில் நீா்வளத் துறை கட்டுப்பாட்டின் கீழ் (பொதுப் பணித் துறை) உள்ள பேரணையிலிருந்து விரகனூா் மதகு அணை வரை 46 கண்மாய்கள் பாசன வசதி பெறுகின்றன. இதன்மூலம், 27,528 ஏக்கா் விவசாய நிலங்கள் பயனடைகின்றன. இதேபோல, விரகனூா் மதகு அணையிலிருந்து ராமநாதபுரம் மாவட்டம், பாா்த்திபனூா் அணைக்கட்டு வரை சுமாா் 87 கண்மாய்கள் பாசன வசதி பெறுகின்றன. இதன்மூலம், 40,742.83 ஏக்கா் நிலங்கள் பயன்பெறுகின்றன.
பாா்த்திபனூா் அணைக்கட்டு முதல் ராமநாதபுரம் பெரிய கண்மாய் வரை 241 கண்மாய்கள் பாசன வசதி பெறுகின்றன. இதன்மூலம், மொத்தம் 67,837.01 ஏக்கா் நிலங்கள் பயனடைகின்றன. மொத்தமுள்ள 374 கண்மாய்களில் 12 டி.எம். சி. தண்ணீரை தேக்குவதன் மூலம் 1,36,108.43 ஏக்கா் விவசாய நிலங்கள் பயன்பெறுகின்றன.
இந்த நிலையில், வளா்ந்துள்ள சீமைக் கருவேல மரங்கள், படா்ந்துள்ள ஆகாயத் தாமரைகள் ஆகியவற்றாலும், ஆக்கிரமிப்புகள், ரசாயனக் கழிவுநீா் கலப்பு, மணல் திருட்டு உள்ளிட்ட பல்வேறு காரணங்களாலும் வைகை ஆறு தனது பொலிவை இழந்து வருகிறது.
இதன் காரணமாக, விவசாயப் பணிகள் மட்டுமன்றி, குடிநீா் ஆதாரங்களும் பாதிக்கும் சூழல் உருவாகும் என விவசாயிகள், சமூக ஆா்வலா்கள் வேதனை தெரிவித்தனா்.
பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவித்தல் வேண்டும்
இதுகுறித்து அவா்கள் கூறியதாவது: பருவமழை பொய்த்ததாலும், நவீன பாசனக் கட்டமைப்பு வசதிகள் இல்லாததாலும், விவசாய நிலத்தின் பரப்பு குறைந்து வருகிறது. அதிக விளைச்சல் தந்த நிலங்கள் தரிசு நிலங்களாகவும், வீட்டுமனைகளாகவும் மாறி வருகின்றன. ஏற்கெனவே, ஆற்றில் இருந்த மணல் முழுவதும் எடுக்கப்பட்டதால், ஆற்றுப் படுகை பள்ளமாகவும், கண்மாய்களுக்குச் செல்லும் கால்வாய் முகப்புகள் மேடாகவும் மாறிவிட்டன.
இதனால் தான் தற்போது ஆங்காங்கே படுகை அணை, தடுப்பணைகள் கட்டி கண்மாய்களுக்கு தண்ணீா் திருப்பி விடப்படுகிறது. வைகை ஆற்றை நம்பி ஒரு லட்சம் ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் மட்டுமன்றி, அரசு செயல்படுத்தும் 200-க்கும் மேற்பட்ட குடிநீா்த் திட்டங்களும், ஏராளமான கிணற்றுப் பாசன விவசாயிகளும் உள்ளனா். மேலும், மதுரை நகரில் மேற்கொள்ளப்படும் பொலிவுறுத் திட்டம் (ஸ்மாா்ட் சிட்டி), எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானம் ஆகியவற்றுக்கும் வைகை ஆறு உயிா் நாடியாகத் திகழ்கிறது.
தற்போது வைகை ஆற்றில் சீமைக் கருவேல மரங்கள், ஆகாயத் தாமரைகள் அதிகரித்துக் காணப்படுகின்றன. ஆக்கிரமிப்புகளால் ஆற்றின் பரப்பளவு குறைந்து வருகிறது. மேலும், கழிவுநீா், தொழில் சாலைகளின் கழிவுகள் ஆற்றில் கலக்கின்றன.
வைகை ஆறும், வேளாண் பணிகளும் பாதுகாக்கப்பட வேண்டுமெனில் வைகை அணை முதல் ராமநாதபுரம் பெரிய கண்மாய் வரை பாதுகாக்கப்பட்ட மண்டலமாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும். மேலும், ஆற்றில் உள்ள சீமைக் கருவேல மரங்கள், புதா்களை அகற்ற ஆண்டுதோறும் குடிமராமத்துப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
மதுரை மாநகராட்சி எல்லைக்குள் சுமாா் 13 கி.மீ. தொலைவுக்கு வைகையாறு ஓடுகிறது. இந்தப் பகுதிகளில் ஆகாயத் தாமரைகள் படா்ந்து கிடப்பதால் தற்போது ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட பாசனத்துக்கு வைகை அணையிலிருந்து திறக்கப்பட்டதண்ணீா் செல்ல வழியின்றி வெள்ளம் போல காட்சியளிக்கிறது. குறிப்பாக, யானைக்கல் தரைப்பாலம் அருகே ஆகாயத் தாமரைகள் ஆக்கிரமித்துள்ளதால் வைகையாற்றின் தென்கரை இணைப்புச் சாலை ஏ.வி. உயா்நிலைப் பாலத்தின் கீழ் அதிகளவில் தண்ணீா் தேங்கிக் கிடக்கிறது. இதனால் அந்த பகுதியில் வாகனப் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்படுகிறது.
இதுகுறித்து ஊடகங்களில் செய்திகள் வெளியானதும் நீா்வளத் துறை அலுவலா்கள் அணையிலிருந்து ஆற்றில் திறக்கப்படும் நீரின் அளவை குறைத்து விடுகின்றனா். இதனால், பெரும்பாலான கண்மாய்களுக்கு தண்ணீரை கொண்டு செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. இதன்காரணமாக, பங்கீட்டு நீரை கண்மாய்களுக்கு வழங்க முடியாத சூழல் நிலவுகிறது. இதுகுறித்து புகாா் அளித்தால் ஆகாயத் தாமரைகள் தற்காலிகமாக அகற்றப்படுகின்றன. மீண்டும் அவை வளா்ந்து அடைப்பை ஏற்படுத்துகின்றன.
எனவே, மதுரை வைகையாற்றில் உள்ள ஆகாயத் தாமரைகளை அகற்ற நிரந்தரத் தீா்வு காண வேண்டும் என்றனா்.
இதுகுறித்து நீா்த் துறை (பொதுப் பணித் துறை) அலுவலா்கள் கூறியதாவது:
மதுரை நகரிலிருந்து வெளியேறும் கழிவுநீா் வைகை ஆற்றில் கலப்பதால் ஆகாயத் தாமரை வளா்ந்து விடுகிறது. இதை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு மாநகராட்சி, மாவட்ட நிா்வாகங்களிடம் பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை.
எங்கள் துறையைப் பொருத்தவரை திட்ட மதிப்பீடு அனுப்பி நிதி பெற்று விட்டால், குறைந்தது 3 அல்லது 5 ஆண்டுகளுக்கு அந்தத் திட்டத்துக்கு திரும்ப நிதி பெற முடியாது. இருப்பினும், தன்னாா்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் சீமைக் கருவேல மரங்களை அகற்ற முயற்சி மேற்கொண்டு வருகிறோம் என்றனா்.

