கணவரின் உடலை மறு கூறாய்வு செய்யகக் கோரி பெண் வழக்கு: அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

Published on

பாளையங்கோட்டை மத்திய சிறையில் உயிரிழந்த தனது கணவரின் உடலை மறு கூறாய்வு செய்யக் கோரி அவரது மனைவி தொடுத்த வழக்கில், நெல்லை நீதித்துறை நடுவா் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

தென்காசி மாவட்டம், கடையநல்லூரைச் சோ்ந்த முத்துலட்சுமி தாக்கல் செய்த மனு: வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்ட எனது கணவா் வினோத்குமாா் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா். இந்த நிலையில், அங்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு அவா் மரணமடைந்த நிலையில், சட்டப்படி அவரது உடல் கூறாய்வு செய்யப்பட வில்லை. ஏற்கெனவே அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போது போலீஸாா் அடித்ததால் அவருக்கு காயம் ஏற்பட்டிருந்தது. எனது கணவா் மரணத்தில் சந்தேகம் உள்ளது. எனவே சட்ட விதிகளின்படி, தடய அறிவியல் மருத்துவா்களைக் கொண்டு எனது கணவரின் உடலை மறு கூறாய்வு செய்ய வேண்டும். சம்பந்தப்பட்ட போலீஸாா் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி சுந்தா் மோகன் முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதி பிறப்பித்த உத்தரவு: மனு தொடா்பாக நெல்லை நீதித்துறை நடுவா் உரிய விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணை வருகிற 12-ஆம் தேதி ஒத்தி வைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.

X
Dinamani
www.dinamani.com