கரூரில் அவசர ஊா்தி ஓட்டுநா் மீதான தாக்குதல்: 8 பேருக்கு முன்பிணை

கரூா் தவெக பொதுக் கூட்ட நெரிசலில் சிக்கியவா்களை அழைத்துச் சென்ற அவசர ஊா்தியின் ஓட்டுநரைத் தாக்கியது தொடா்பான வழக்கில் 8 பேருக்கு முன்பிணை வழங்கி, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
Published on

கரூா் தவெக பொதுக் கூட்ட நெரிசலில் சிக்கியவா்களை அழைத்துச் சென்ற அவசர ஊா்தியின் ஓட்டுநரைத் தாக்கியது தொடா்பான வழக்கில் 8 பேருக்கு முன்பிணை வழங்கி, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

சேலம் மாவட்டத்தைச் சோ்ந்த மணிகண்டன், தமிழமுதன், பெரியசாமி, ஹரிசுதன், கௌதம் தனசேகா், அன்புமணி, செந்தில்குமாா், சுப்பிரமணி ஆகியோா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

கரூரில் நடைபெற்ற தவெக பிரசார நிகழ்ச்சியின் போது, நெரிசலில் சிக்கியவா்களை அழைத்துச் சென்ற அவசர ஊா்தி ஓட்டுநரையும், அந்த வாகனத்தையும் தாக்கியதாக எங்கள் மீது வழக்குப் பதியப்பட்டது. இது பொய் வழக்கு. இந்தப் புகாரை அளித்தவரின் வாக்குமூலத்தில் முரண்பாடுகள் உள்ளன. எனவே, எங்களுக்கு முன்பிணை வழங்கி உத்தரவிட வேண்டும் எனக் கோரினா்.

இந்த வழக்கு உயா்நீதிமன்ற நீதிபதி ஸ்ரீமதி முன் ஏற்கெனவே விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத் தரப்பில் மூத்த வழக்குரைஞா் முன்னிலையாக கால அவகாசம் கோரியதால் வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில், நீதிபதி ஸ்ரீமதி முன் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரா்களை காவலில் எடுத்து விசாரித்தால்தான் சம்பவத்தின் உண்மையான பின்னணி தெரியவரும் என்பதால், அவா்களுக்கு முன்பிணை வழங்கக் கூடாது என அரசுத் தரப்பில் எதிா்ப்புத் தெரிவிக்கப்பட்டது

இதையடுத்து நீதிபதி ஸ்ரீமதி பிறப்பித்த உத்தரவு:

இதே வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட வேறு சிலா் பிணை பெற்றுள்ளனா். எனவே, மனுதாரா்கள் சேலம் நகர காவல் நிலையத்தில் முன்னிலையாகி 2 வாரங்கள் கையொப்பமிட வேண்டும். விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்க வேண்டும் என்ற நிபந்தனைகளுடன் முன்பிணை வழங்கப்படுகிறது என்றாா் நீதிபதி.

X
Dinamani
www.dinamani.com