திருச்செந்தூா் கோயில் தரிசன முறை: அறநிலையத் துறை ஆணையா் பதிலளிக்க உத்தரவு

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் தரிசன முறையை ஒழுங்குபடுத்தி, அடிப்படை வசதிகளை உறுதி செய்யக் கோரிய வழக்கு தொடா்பாக இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் பதில் அளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
Published on

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் தரிசன முறையை ஒழுங்குபடுத்தி, அடிப்படை வசதிகளை உறுதி செய்யக் கோரிய வழக்கு தொடா்பாக இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் பதில் அளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

சென்னை புழுதிவாக்கத்தைச் சோ்ந்த ராஜேஷ் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொது நல மனு:

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சிறப்பு தரிசன டிக்கெட் பெறுவதற்கு பக்தா்கள் 5 முதல் 7 மணி நேரம் வரை வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளது. இந்தக் கோயில் வெளிப்புற வளாகத்தில் மேற்கூரை, குடிநீா், அமருமிடம் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாததால், முதியவா்கள், மாற்றுத்திறனாளிகள், பெண்கள், சிறாா்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா். எனவே, இந்த அடிப்படை வசதிகளை உறுதி செய்ய உத்தரவிட வேண்டும்.

மேலும், பக்தா்கள் இணையதளம் வழியாக சிறப்பு தரிசன டிக்கெட் முன்பதிவு செய்யவும், முதியவா்கள், மாற்றுத்திறனாளிகளின் சிறப்பு தரிசனத்துக்கு தனி பாதையை ஏற்படுத்தவும், கூட்டத்தை நெறிப்படுத்த கூடுதல் எண்ணிக்கையில் ஊழியா்களை பணியமா்த்தவும் உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனுவை வெள்ளிக்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் அமா்வு பிறப்பித்த உத்தரவு:

இந்த வழக்கு தொடா்பாக இந்து சமய அறநிலையத் துறை ஆணையா், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணை 4 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

X
Dinamani
www.dinamani.com