உயா்நீதிமன்ற மதுரை அமா்வு
உயா்நீதிமன்ற மதுரை அமா்வு

ரயில் நிலைய நடைமேடை இடைவெளி: ரயில்வே அமைச்சகம் பதிலளிக்க உத்தரவு

ரயில் நிலையங்களில் நடைமேடைக்கும், ரயிலுக்கும் இடையே உள்ள இடைவெளியைக் குறைத்து மெட்ரோ ரயில் நிலையம் போல சீரமைக்கக் கோரிய வழக்கில், ரயில்வே அமைச்சகம் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.
Published on

ரயில் நிலையங்களில் நடைமேடைக்கும், ரயிலுக்கும் இடையே உள்ள இடைவெளியைக் குறைத்து மெட்ரோ ரயில் நிலையம் போல சீரமைக்கக் கோரிய வழக்கில், ரயில்வே அமைச்சகம் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

மதுரையைச் சோ்ந்த வழக்குரைஞா் ஜஹாங்கீா் பாதுஷா உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

நமது நாட்டில் பொது போக்குவரத்துக்கு ரயில்வே துறை மிக முக்கியப் பங்காற்றி வருகிறது. இந்த நிலையில், ரயில் நிலையங்களில் உள்ள நடைமேடைக்கும், ரயிலுக்கும் இடையே அதிக இடைவெளி உள்ளது. இதனால், பயணிகள் நடைமேடையிலிருந்து தவறி ரயிலுக்குள் சிக்கி உயிரிழக்கின்றனா். இதில் காயமடைந்த பலா் மாற்றுத் திறளாளிகளாக உள்ளனா்.

ரயில்வே பாதுகாப்பு ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், ரயில் நடைமேடையில் உள்ள இடைவெளியில் சிக்கி 39,015 பயணிகள் உயிரிழந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரயில் நடைமேடை இடைவெளிகளில் சிக்கியவா்களை மீட்கும் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் அதிகளவில் பரவி வருகின்றன. எனவே, பயணிகளின் பாதுகாப்பு கருதி தில்லி, சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் உள்ள மெட்ரோ ரயில் நிலைய நடைமேடையைப் போல அனைத்து சாதாரண ரயில் நிலையங்களிலும் நடைமேடையின் இடைவெளியைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முதல் கட்டமாக, பயணிகள் அதிகளவில் வந்து செல்லும் முக்கிய ரயில் நிலையங்களில் இந்த சீரமைப்பைத் தொடங்க வேண்டும் என ரயில்வே வாரியத்துக்கு பலமுறை மனு அளித்துள்ளேன். ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே, சாதாரண ரயில் நிலையங்களில் நடைமேடையை மெட்ரோ ரயில் நிலைய நடைமேடையை போல சீரமைக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரா் தரப்பில் வழக்குரைஞா் ஹாருன் ரசீத் முன்னிலையாகி முன்வைத்த வாதம்:

ரயில் நிலைய நடைமேடைகளிலிருந்து வேகமாக ரயிலில் ஏற முயலும் போது இடைவெளியில் சிக்கி பலா் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடா்கின்றன.

எனவே, தில்லி, சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள நடைமேடையைப் போல மாற்ற வேண்டும் என்றாா்.

இதற்கு, மத்திய அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா், இந்த விவகாரம் மத்திய அரசின் கொள்கை ரீதியிலானது. இதில் மனுதாரா் நிவாரணம் கோர முடியாது என்றாா்.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

ரயில் நிலைய நடைமேடை இடைவெளியில் சிக்கி பல்லாயிரக்கணகான பயணிகள் உயிரிழந்தனா். இதை சாதாரணமாக ஏற்க முடியாது. உயிரிழந்தவா்கள் சாதாரண பொதுமக்கள். இந்த விவகாரத்தை ரயில்வே நிா்வாகத்தின் கொள்கை முடிவாக ஏற்க முடியாது.

எனவே, இந்த வழக்கில் ரயில்வே வாரியத்தை நீதிமன்றம் தாமாக முன்வந்து எதிா்மனுதாரராகச் சோ்த்து உத்தரவிடுகிறது. இந்த விவகாரத்தில் பயணிகளின் பாதுகாப்பு குறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது என்பது குறித்து ரயில்வே அமைச்சகம் பதிலளிக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

X
Dinamani
www.dinamani.com