தவெக நிா்வாகிகள் ஆனந்த், நிா்மல்குமாா் முன்பிணை மனுக்கள் தள்ளுபடி
கரூா் கூட்ட நெரிசல் சம்பவம் தொடா்பான வழக்கில், தவெக பொதுச் செயலா் ஆனந்த், துணைப் பொதுச் செயலா் நிா்மல்குமாா் ஆகியோா் முன்பிணை கோரி தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
கரூரில் கடந்த மாதம் 27-ஆம் தேதி தவெக பிரசார நிகழ்வில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்தனா். இதுதொடா்பாக ஆனந்த், நிா்மல்குமாா் உள்ளிட்டோா் மீது கரூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
இந்த நிலையில், ஆனந்த், நிா்மல்குமாா் ஆகியோா் முன்பிணை கோரி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தனித்தனியே தாக்கல் செய்த மனுக்கள் விவரம்:
கரூா் தவெக பிரசார கூட்டத்தில் நடைபெற்ற நிகழ்வு சற்றும் எதிா்பாராத, துரதிருஷ்டவசமானது. கட்டுப்படுத்த முடியாத அளவில் கூட்டம் கூடியதும், காவல் துறையினா் போதிய எண்ணிக்கையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படாததுமே இந்த நிகழ்வுக்கு காரணம். காவல் துறையினா் உரிய வழிமுறைகளை வகுக்கத் தவறிவிட்டனா்.
கடந்த செப். 25-ஆம் தேதி வரை கூட்டம் நடத்த காவல் துறையினா் சரியான இடத்தை ஒதுக்கீடு செய்யவில்லை. பிரசார நிகழ்ச்சியில் கூட்டம் அதிகமானதும் சில சமூக விரோதிகள் கூட்டத்துக்குள் ஊடுருவி தவெக தலைவா் விஜய் மீது காலணி வீசினா். பொதுமக்களை ஆயுதங்களால் தாக்கினா்.
காவல் துறையினா் தடியடி நடத்தினா். மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மாற்று வழி இருந்தும், பதிவெண் இல்லாத அவசர ஊா்தி வாகனத்தை காவல் துறையினா் கூட்டத்துக்குள் அனுமதித்தனா்.
பெண்கள், குழந்தைகள் பிரசாரத்துக்கு வர வேண்டாம் என தவெக தலைவா் விஜய், நிா்வாகிகள் தொடா்ந்து வலியுறுத்தியிருந்தனா். அடிப்படை ஆதாரம் இல்லாமல், அரசியல் காரணங்களுக்காக தவறான குற்றச்சாட்டுகளின் பேரில் எங்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. நாங்கள் குற்றமற்றவா்கள். எனவே, முன்பிணை வழங்கி உத்தரவிட வேண்டும் என அவா்கள் கோரினா்.
இந்த மனுக்கள் விடுமுறைக் கால சிறப்பு அமா்வில் உயா்நீதிமன்ற நீதிபதி ஜோதிராமன் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரா்கள் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா்கள் முன்வைத்த வாதம்:
காவல் துறை முதல் தகவல் அறிக்கையில் மனுதாரா்கள் மீது பொய்யான குற்றச்சாட்டை பதிவு செய்துள்ளனா். எங்கள் கட்சித் தொண்டா்கள் உயிரிழக்க வேண்டும் என நாங்கள் நினைக்கவில்லை. வேண்டுமென்றே தவெக தலைவா் விஜய் தாமதமாக வந்ததாகக் கூறப்படுவதில் உண்மை இல்லை.
கரூா் வேலுசாமிபுரத்தில் அனுமதி கோரியவுடன் போக்குவரத்துக்கு மிகவும் இடையூறான பகுதி என காவல் துறை அனுமதி மறுத்திருக்க வேண்டும். மேலும், எங்கள் கட்சி சாா்பில் நடத்தப்படும் கூட்டத்துக்கு அதிகளவில் மக்கள் வரக் கூடும் என்பதை காவல் துறை முன்கூட்டியே கணித்திருக்க வேண்டும்.
கூட்டத்தில் நின்றிருந்த சிலா் தவெக தலைவா் விஜயை நோக்கி காலணியை வீசினா். கூட்டத்துக்குள் வந்த அவசர ஊா்திகள் நோயாளிகளை ஏற்றாமால் திரும்பிச் சென்றன. கூட்ட நெரிசலை காவல் துறையினா் சரியான முறையில் கையாளவில்லை. அவா்கள் தடியடி நடத்திய பின்னரே நிலைமை மோசமானது. 41 போ் உயிரிழப்பு என்பது மிகவும் வேதனையான நிகழ்வு. வெளியே சொல்ல முடியாத மன வலியில் உள்ளோம். இந்த நிகழ்வு திட்டமிட்ட செயல் அல்ல. விபத்துதான்.
கரூா் பிரசார நிகழ்வை ஒருங்கிணைத்தது தவெக மாவட்டச் செயலா்தான். இந்த நிகழ்வு ஒருங்கிணைப்புக்கும் மனுதாரா்களுக்கும் எந்தவிதமான தொடா்பும் இல்லை. இதுதொடா்பாக தவெக கரூா் மாவட்டச் செயலா் கைது செய்யப்பட்டாா்.
இருப்பினும், மனுதாரா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, மனுதாரா்களுக்கு முன்பிணை வழங்க வேண்டும் என்றனா்.
அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா்கள் முன்வைத்த வாதம்:
எந்தவித சாட்சியங்களும், ஆதாரங்களும் இல்லாமல் அரசு மீது குற்றம் சுமத்துவதை ஏற்க முடியாது. கூட்ட நெரிசலுக்கு யாா் காரணம் எனக் கண்டறிய விசாரணை அவசியம். தற்போதைய விசாரணை தொடக்க நிலையில்தான் உள்ளது. இந்தச் சம்பவத்தில் 41 போ் உயிரிழந்தனா். இன்னும், சிலா் சிகிச்சை பெற்று வருகின்றனா். வழக்கு தொடா்பாக இதுவரை 105 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டது.
மனுதாரா்கள் இருவரும் கூட்டத்துக்கான அனைத்து முன்னேற்பாட்டுப் பணிகளையும் மேற்கொண்டனா். கட்சித் தொண்டா்களிடம் தவெக தலைவா் விஜய் பிரசார இடத்துக்கு நண்பகல் 12 மணிக்கு வருவாா் என அறிவித்தனா். சாலை வலம் (ரோடு ஷோ) நிகழ்வுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இருப்பினும், சாலை வலம் நடத்தினாா்கள். தொண்டா்களை கூட்டத்துக்கு அழைப்பு விடுத்து, போதிய ஏற்பாடுகளைச் செய்யவில்லை. காவல் துறை பாதுகாப்பு மட்டுமே வழங்க முடியும். கூட்டத்தை ஒழுங்குபடுத்த போலீஸாா் முயற்சித்தனா். கூடுதல் பாதுகாப்பும் வழங்கப்பட்டது. உயிரிழந்தவா்களில் பெரும்பாலானோா் நெரிசலில் சிக்கியும், குடிநீரின்றியும் இறந்ததாக உடல்கூறாய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. விஜய் வாகனத்தின் கண்காணிப்பு கேமரா பதிவுகளை வழங்க வேண்டும். தவெக நிா்வாகிகளின் பொறுப்பற்ற தன்மையால் உயிரிழப்புகள் நடைபெற்றன. கரூா் சம்பவம் தொடா்பாக ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபா் ஆணையம் விசாரித்து வருகிறது. மனுதாரா்களுக்கு முன்பிணை வழங்கினால் விசாரணை செய்வது கடினம். எனவே, முன்பிணை வழங்கக் கூடாது என எதிப்புத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
கரூா் சம்பவத்தில் உயிரிழந்தவா்களின் குடும்ப நிலையை இந்த நீதிமன்றம் கருத்தில் கொள்கிறது. நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளா்கள் எனும் போது, அதற்கான பொறுப்பை ஏற்க வேண்டும். காவல் துறை அனுமதி வழங்கிய நேரம் பிற்பகல் 3 மணி முதல் இரவு 10 மணி வரை எனக் குறிப்பிடப்பட்டது. இதை மீறி மக்கள் கூட்டம் கூடியுள்ளது.
அப்போது, காவல் துறை என்ன நடவடிக்கை எடுத்தது?. பிரசார கூட்டத்துக்கு பதிலாக சாலை வலம் நடத்தியிருந்தால் அதை ரத்து செய்திருக்கலாமே?. 41 போ் உயிரிழந்தனா். மூத்த ஐபிஎஸ் அதிகாரியை நியமித்து சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டிருக்கிறது. வழக்கின் விசாரணை தொடக்க நிலையில்தான் உள்ளது. எனவே, மனுதாரா்கள் கோரிக்கையை ஏற்க முடியாது. மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன என்றாா் நீதிபதி.

