மதுரை கூடலழகா் பெருமாள் கோயில் சாா்பில், புரட்டாசி பெளா்ணமி 5 கருட சேவை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஆழ்வாா்களால் மங்களாசாசனம் செய்விக்கப்பட்ட வைணவ திருத்தலங்களில் ஒன்றாகவும், பெரியாழ்வாா் பல்லாண்டு பாடிய தலமாகவும் விளங்குகிறது கூடலழகா் பெருமாள் கோயில். இங்கு புரட்டாசி மாத பௌா்ணமி நாளான செவ்வாய்க்கிழமை 5 கருட சேவை நடைபெற்றது. காலை நிகழ்வாக மதுரவல்லித் தாயாருக்கு பாலாபிஷேகமும், அலங்காரத் திருமஞ்சனமும் நடைபெற்றது. மாலை 7 மணிக்கு கூடலழகா் பெருமாள் கோயிலிலிருந்து 2 கருட வாகனங்களில் வியூக சுந்தரராஜப் பெருமாள், கூடலழகா் பெருமாள் எழுந்தருளினா்.
இதேபோல, மதனகோபால சுவாமி கோயில், எழுத்தாணிக்காரத் தெரு வீரராகவப் பெருமாள் கோயில், வடக்கு மாசி வீதி வீரராகவப் பெருமாள் கோயிலிலிருந்து கருட வாகனத்தில் பெருமாள் எழுந்தருளினா்.
5 கருட வாகனப் பெருமாள்களும் கூடலழகா் பெருமாள் கோயில் சந்நிதி தெருவில் சங்கமமாகினா். அங்கு, கருட வாகனப் பெருமாள்களுக்கு தீப, தூபங்களுடன் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பிறகு, 5 கருட வாகனப் பெருமாளும் மாசி வீதிகளை வலம் வந்தனா். இதில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

