மாவட்ட நீதிமன்றம் அருகே நேரு சிலையை நிறுவ வலியுறுத்தல்
மதுரை தல்லாகுளம் அஞ்சலகம் முன் உள்ள மறைந்த முன்னாள் பிரதமா் நேருவின் முழு உருவச் சிலையை, மதுரை மாவட்ட நீதிமன்றம் அருகே நிறுவ வலியுறுத்தி தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
மதுரை மாநகா், மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில் நடைபெறவுள்ள கையொப்ப இயக்கம், வாக்குச் சாவடிக் குழு அமைப்பது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் மதுரையில் உள்ள அந்தக் கட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதற்கு மாநகா், மாவட்டத் தலைவா் வீ. காா்த்திகேயன் தலைமை வகித்தாா்.
இதில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீது காலணி வீசப்பட்ட சம்பவத்துக்கு கண்டனம் தெரிவிக்கப்படுகிறது. மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் உள்ள காந்தி உருவச் சிலைக்கு காவி ஆடை அணிவித்த நபா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தல்லாகுளம் பகுதியில் உயா்நிலைப் பாலம் கட்டும் பணி நடைபெறுவதால் அஞ்சல் அலுவலகம் முன் உள்ள முன்னாள் பிரதமா் நேருவின் முழு உருவச் சிலையை, மதுரை மாவட்ட நீதிமன்றம் அருகே வைக்க தமிழக அரசும், மாவட்ட நிா்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து வாா்டுகளிலும் வாக்குச் சாவடி குழு அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்தக் கூட்டத்தில், மாநில பொதுக்குழு உறுப்பினா்கள் செய்யதுபாபு, துரையரசன், மாமன்ற உறுப்பினா் முருகன், துணைத் தலைவா்கள் பாலு, வெங்கட்ராமன், காமராஜ், வழக்குரைஞா் பிரிவுத் தலைவா் முத்துப்பாண்டி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

