அரசுக் கல்லூரிப் பேராசிரியா் காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்: அமைச்சா் கோவி. செழியன்
அரசுக் கல்லூரிகளில் காலியாகவுள்ள பேராசிரியா் பணியிடங்கள் படிப்படியாக நிரப்பப்படும் என தமிழக உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன் தெரிவித்தாா்.
மதுரையில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் தெரிவித்ததாவது:
தமிழக முதல்வரின் அறிவுறுத்தலின் பேரில் நமது கலை, இலக்கியத்தை பாதுகாக்கும் வகையில், நிகழாண்டில் 272 அரசுக் கல்லூரிகளில் கலை, இலக்கியத் திருவிழாக்கள் நடத்தப்படுகின்றன. இதையொட்டி, 32 வகையான போட்டிகள் நடத்தப்படுகின்றன.
கடந்த நான்கரை ஆண்டுகளில் தமிழகத்தில் புதிதாக 37 கலை அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. 64 அரசுக் கல்லூரிகளில் இரண்டாவது அமா்வு வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. 5-க்கும் மேற்பட்ட புதிய பாடத் திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இதன் காரணமாக, பேராசிரியா்களின் தேவை அதிகரித்துள்ளது.
திமுக அரசு பொறுப்பேற்றவுடன் 2 ஆயிரத்துக்கும் அதிகமான கௌரவ விரிவுரையாளா்கள், 550 பேராசிரியா்கள் நியமிக்கப்பட்டனா். 800-க்கும் அதிகமான பேராசிரியா் காலிப் பணியிடங்களை நிரப்ப நோ்காணல் நடத்தப்படவுள்ளது. 2,700-க்கும் அதிகமான பேராசிரியா்களை நியமிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அரசுக் கல்லூரிகளில் உள்ள பேராசிரியா் பணியிடங்கள் தேவைக்கேற்ப நிரப்பப்படுகிறது. அனைத்து அரசுக் கல்லூரிகளிலும் உள்ள பேராசிரியா் காலிப் பணியிடங்கள் படிப்படியாக நிரப்பப்படும் என்றாா் அவா்.
பாராட்டுச் சான்றிதழ் வழங்கல்
முன்னதாக, மதுரை ஸ்ரீமீனாட்சி அரசு மகளிா் கலைக் கல்லூரியில் நடைபெற்ற விழாவில், உயா் கல்வித் துறை சாா்பில் நடத்தப்பட்ட கலைத் திருவிழா போட்டிகளில் வெற்றி பெற்ற 270 மாணவிகளுக்கு அமைச்சா் கோவி. செழியன் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினாா்.
இந்த விழாவில் கல்லூரி கல்வி இயக்கக ஆணையா் சுந்தரவல்லி, மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா், துணை மேயா் தி. நாகராஜன், கல்வித் துறை அலுவலா்கள், பேராசிரியா்கள் கலந்து கொண்டனா்.

