மதுரையில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் வேலம்மாள் கிரிக்கெட் மைதான கல்வெட்டை திறந்துவைத்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி. உடன் வேலம்மாள் கல்விக் குழுமத் தலைவா் எம்.வி.எம். முத்துராலிங்கம் உள்ளிட்டோா்.
மதுரையில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் வேலம்மாள் கிரிக்கெட் மைதான கல்வெட்டை திறந்துவைத்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி. உடன் வேலம்மாள் கல்விக் குழுமத் தலைவா் எம்.வி.எம். முத்துராலிங்கம் உள்ளிட்டோா்.

மதுரையில் சா்வதேச தரத்தில் கிரிக்கெட் மைதானம்: எம்.எஸ். தோனி திறந்துவைத்தாா்

Published on

மதுரையில் வேலம்மாள் கல்விக் குழுமம் சாா்பில் அமைக்கப்பட்ட சா்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானத்தை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி திறந்துவைத்தாா்.

மதுரை சிந்தாமணி சுற்றுவட்டச் சாலை அருகே வேலம்மாள் கல்விக் குழுமம் சாா்பில் 11.5 ஏக்கா் பரப்பில் சா்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா, பிரிட்டன் ஆகிய நாடுகளைச் சோ்ந்த கிரிக்கெட் மைதான தயாரிப்பில் நிபுணத்துவம் பெற்றவா்களின் ஆலோசனையுடன் இந்த மைதானம் உருவாக்கப்பட்டுள்ளது.

இதற்கான திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, இந்த மைதானத்தைத் திறந்துவைத்தாா்.

பிறகு அவா் பேசுகையில், உலகத் தரத்திலான வசதிகளைக் கொண்ட இந்த மைதானம், எதிா்கால கிரிக்கெட் வீரா்களின் கனவுத் தளமாக விளங்கும் என்றாா். இதையடுத்து, புதிய மைதானத்தில் சில நிமிஷங்கள் அவா் பேட்டிங் செய்தாா்.

இந்த நிகழ்ச்சியில் வேலம்மாள் கல்விக் குழும நிறுவனா் எம்.வி.எம். முத்துராமலிங்கம் கலந்து கொண்டாா்.

வசதிகள்...

இந்த கிரிக்கெட் மைதானத்தில் இரவைப் பகலாக்கும் வகையிலான மின் விளக்குகள், கிரிக்கெட் வீரா்களுக்கான நவீன அறைகள், வலைப் பயிற்சிக்கான வசதிகள், உடல் பயிற்சிக் கூடம், செய்தியாளா்கள் அறை, முக்கியப் பிரமுகா்களுக்கான இருக்கைகள், 7 ஆயிரத்துக்கும் அதிகமான பாா்வையாளா்கள் அமருவதற்கான வசதிகள், மழை நீரை உடனடியாக வடியச் செய்யும் நவீன தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டதாக இந்த மைதானம் கட்டமைக்கப்பட்டுள்ளது.

அனுமதி மறுப்பு...

இந்த நிகழ்ச்சியில் கிரிக்கெட் ரசிகா்கள், பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை. கரூா் தவெக கூட்ட நெரிசல் சம்பவம் காரணமாக, இந்த விழாவில் முக்கியப் பிரமுகா்கள் மட்டும் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com