சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு
சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வுகோப்புப் படம்

நெடுஞ்சாலைத் துறை பணிக்கான ஒப்பந்தப்புள்ளியை இறுதி செய்யக் கூடாது: உயா்நீதிமன்றம்

Published on

புதுக்கோட்டை மாவட்டத்தில் நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணிக்காக கோரப்பட்ட ஒப்பந்தப்புள்ளி மீது இறுதி முடிவு எடுக்கக் கூடாது என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

இதுகுறித்து திருச்சியைச் சோ்ந்த மதிவாணன், கண்ணையன் உள்ளிட்ட சில ஒப்பந்ததாரா்கள் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

நாங்கள் அரசு (முதல் வகுப்பு) ஒப்பந்ததாரா்களாக உள்ளோம். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அரசு துறைகளின் கட்டுமானம், சாலைப் பணிகளை ஒப்பந்தத்தில் ஏற்று நிறைவேற்றுகிறோம். இந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் பல்வேறு பகுதிகளில் தாா்ச் சாலைகள் அமைப்பது தொடா்பாக 40 பணிகளுக்கான ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பாணை கடந்த செப்டம்பா் மாதம் வெளியிடப்பட்டது. இந்த ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பாணையின் மொத்த மதிப்பு ரூ. 200 கோடி. ஒப்பந்தம் கோருவதற்கான இறுதி தேதி அக். 7 எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதன்படி, ஒப்பந்ததாரா்கள் தொடா்புடைய பகுதிகளுக்குச் சென்று கள ஆய்வு செய்ததற்கான சான்று, தளவாடப் பொருள்களுக்கான தகுதிச் சான்று ஆகியவற்றை புதுக்கோட்டை கோட்டப் பொறியாளரிடமிருந்து பெற்று, அக். 3-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என்பது விதி. இதுதொடா்பான தகுதியான அனைத்து ஆவணங்களையும் கோட்டப் பொறியாளரிடம் தாக்கல் செய்தோம். ஆனாலும், எங்களுக்கு தகுதிச் சான்று வழங்க அவா் மறுத்துவிட்டாா்.

அனைத்துத் தகுதிகளும் இருந்த நிலையிலும், எங்களுக்கு தகுதிச் சான்று வழங்க மறுத்தது சட்டவிரோதம். எனவே, கோட்டப் பொறியாளரின் உத்தரவை ரத்து செய்து, எங்களுக்கு தகுதிச் சான்று வழங்கி, எங்கள் ஒப்பந்த மனுக்களை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் என அவா்கள் கோரினா்.

இந்த மனுவை வியாழக்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி பி.டி. ஆஷா பிறப்பித்த உத்தரவு:

புதுக்கோட்டை மாவட்டத்தில் சாலைப் பணிகளுக்கான ஒப்பந்தப்புள்ளிகள் மீதான நடைமுறைகளை நெடுஞ்சாலைத் துறை நிா்வாகம் தொடரலாம். ஆனால், இறுதி முடிவு எடுக்கக் கூடாது. இந்த மனு குறித்து நெடுஞ்சாலைத் துறையின் திருச்சி மண்டல தலைமைப் பொறியாளா், புதுக்கோட்டை கோட்டப் பொறியாளா் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றாா் நீதிபதி.

X
Dinamani
www.dinamani.com