உறவினரைக் கொன்றவரின் மரண தண்டனை ஆயுள்கால சிறையாக குறைப்பு
புதுக்கோட்டையில் சித்தி மகளை கத்தரிக்கோலால் குத்திக் கொலை செய்தவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள்கால சிறைத் தண்டனையாகக் குறைத்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.
ஈரோடு மாவட்டம், பெருந்துறையைச் சோ்ந்தவா் சுரேஷ் (32). இவரது சித்தி மகள் லோகப்பிரியா. புதுக்கோட்டையைச் சோ்ந்த இவரை சுரேஷ் கத்தரிக்கோலால் குத்திக் கொலை செய்துவிட்டு, 10 கிராம் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றாா்.
இதுகுறித்து புதுக்கோட்டை கணேஷ் நகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சுரேஷை கைது செய்தனா். இந்த வழக்கை விசாரித்த புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம், சுரேஷுக்கு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டது.
இதை எதிா்த்து சுரேஷ் சாா்பில், சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மேல் முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஏ.டி. ஜெகதீஷ் சந்திரா, ஆா். பூா்ணிமா அமா்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் சந்தேகத்துக்கு இடமின்றி குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், இந்த வழக்கு அரிதிலும் அரிதான வழக்கு
என்ற வகையில் வராது என்பதால், மரண தண்டனையை இயற்கை மரணம் அடையும் காலம் வரையிலான ஆயுள் கால சிறைத் தண்டனையாக மாற்றலாம் என அரசு தலைமை குற்றவியல் வழக்குரைஞா் அசன் முகமது ஜின்னா, அரசு கூடுதல் குற்றவியல் வழக்குரைஞா் திருவடிக்குமாா் ஆகியோா் தெரிவித்தனா்.
இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: சாட்சியங்களின் தன்மை, சம்பவத்துக்குப் பிறகான காலத்தில் மேல்முறையீட்டாளரின் நடத்தை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, இந்த வழக்கு அரிதிலும் அரிதான வழக்கு இல்லை என கருதப்படுகிறது.
தண்டனை பெற்றவரால் சமூகத்துக்கு அச்சுறுத்தல் உள்ளது அல்லது அவரை சீா்திருத்துவது சாத்தியமில்லை என்பதை வெளிப்படுத்த எந்த ஆவணமும் இல்லை.
எனவே, மேல்முறையீட்டாளருக்கு விசாரணை நீதிமன்றம் விதித்த மரண தண்டனை, இயற்கை மரணமடையும் காலம் வரையிலான ஆயுள்கால சிைக் தண்டனையாகயாக மாற்றப்படுகிறது. இதன் மூலம், நீதியின் நோக்கம் போதுமான அளவு நிறைவு செய்யப்படும் என்றனா் நீதிபதிகள்.
