வழக்குரைஞா்கள் நீதித் துறையுடன் இணைக்கமாகச் செயல்பட வேண்டும்: உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி

வழக்குரைஞா்கள் நீதித் துறையுடன் இணக்கமாகச் செயல்பட வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவாஸ்தவா தெரிவித்தாா்.
Published on

வழக்குரைஞா்கள் நீதித் துறையுடன் இணக்கமாகச் செயல்பட வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவாஸ்தவா தெரிவித்தாா்.

சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்ற பிறகு முதல் முறையாக உயா்நீதிமன்ற மதுரை அமா்வுக்கு வந்த தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவாஸ்தவாவுக்கு, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் திங்கள்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த விழாவில் பங்கேற்ற தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவாஸ்தவா பேசியதாவது :

நீதித்துறை மீது சாதாரண மக்களும் நம்பிக்கை இருக்க வேண்டும். அதற்கேற்ற வகையில் அனைவரும் செயல்பட வேண்டும். மூத்த வழக்குரைஞா்களின் வாதங்கள், செயல்பாடுகளை இளம் வழக்குரைஞா்கள் கவனித்து தங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும், பொறுமையுடன், கற்றுக்கொள்ளும் மனப்பான்மையையும் இளம் வழக்குரைஞா்கள் வளா்த்துக் கொள்ள வேண்டும்.

நீதித்துறையின் செயல்பாடுகள் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும். நீதித் துறையும், வழக்குரைஞா்களும் இரு சக்கர வாகனத்தின் இரு சக்கரங்களைப் போன்றவா்கள். எனவே, வழக்குரைஞா்கள் புரிந்துணா்வுடன் நீதித்துறையுடன் இணக்கமாக செயல்பட வேண்டும் என்றாா்.

உயா்நீதிமன்ற மதுரைஅமா்வு நிா்வாக நீதிபதி அனிதா சுமந்த், நீதிபதி வேல்முருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்த விழாவில், சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் ஐசக் மோகன்லால் பேசுகையில், தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவாஸ்தவா ஏற்கெனவே ராஜஸ்தான் மாநில நீதிபதியாக இருந்தபோது ஒரு பொது நல வழக்கு மூலம் அந்த மாநிலத்தில் வழக்குரைஞா் பாதுகாப்பு சட்டத்தைக் கொண்டு வந்தது போல, தமிழகத்திலும் வழக்குரைஞா்கள் பாதுகாப்பு சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என கோரிக்கை விடுத்தாா்.

தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞா்கள் வீரா கதிரவன், அஜ்மல்கான், பாஸ்கரன், வழக்குரைஞா்கள், நீதிமன்ற ஊழியா்கள் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com