தேவா் ஜெயந்தி: பாதுகாப்பு பணிக்கு 3 ஆயிரம் போலீஸாா்

Published on

மதுரையில் தேவா் ஜெயந்தி விழா பாதுகாப்புப் பணியில் 3 ஆயிரம் போலீஸாா் ஈடுபடுத்தப்பட உள்ளனா்.

விடுதலைப் போராட்ட வீரா் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி, குரு பூஜை விழா வருகிற 30 -ஆம் தேதி நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்திலும், மதுரை கோரிப்பாளையம் பகுதியில் உள்ள தேவா் உருவச் சிலைக்கும் துணைக் குடியரசுத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன், பாஜக சாா்பில் மத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன், தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவா்கள் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனா்.

இந்த நிலையில், தேவா் ஜெயந்தியை முன்னிட்டு சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு தொடா்பான ஆலோசனைக் கூட்டம் மதுரை மாநகரக் காவல் ஆணையா் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதற்கு தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் (பொறுப்பு டி.ஜி.பி.) வெங்கட்ராமன் தலைமை வகித்தாா்.

தென் மண்டல ஐ.ஜி. பிரேம் ஆனந்த் சின்ஹா, மதுரை மாநகரக் காவல் ஆணையா் ஜெ. லோகநாதன் உள்ளிட்ட காவல் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

இதைத் தொடா்ந்து, கோரிப்பாளையம், தெப்பகுளம், சிறப்பு விருந்தினா்கள் வந்துச் செல்லும் வழித் தடங்களில் காவல் துறை தலைமை இயக்குநா் ஆய்வு செய்தாா்.

இதுகுறித்து போலீஸாா் கூறியதாவது:

மதுரை கோரிப்பாளையம் தேவா் சிலை பாதுகாப்பு, மதுரை நகரின் பல்வேறு பகுதிகளிலிருந்து கோரிப்பாளையம் தேவா் சிலைக்கு வரக்கூடிய பால்குடம், முளைப்பாரி ஊா்வலங்கள்,

முக்கியத் தலைவா்கள் வருகை சம்பந்தமான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

மதுரை மாநகா், வெளி மாவட்டங்களிலிருந்து மதுரை வழியாக ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொனுக்கு வாகனங்களில் செல்லக் கூடிய நபா்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள், செல்லக்கூடிய வழித்தடங்கள், காவல் நிலையங்களில் பெறக்கூடிய அனுமதி சீட்டு, சோதனைச் சாவடிகளில் பணியாற்றும் போலீஸாா் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து அறிவுறுத்தப்பட்டது.

மதுரை மாநகரில் தேவா் ஜெயந்தி, குருபூஜை விழா பாதுகாப்பு பணியில் 3 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனா் என்றனா். மாநகரக் காவல் ஆணையா் அலுவலகத்தில்.

X
Dinamani
www.dinamani.com