கருத்துச் செழுமைக்கு ஆழமான வாசிப்பு அவசியம்! - அமைச்சா் பழனிவேல் தியாகராஜன்
பேச்சாளா்களின் கருத்துச் செழுமைக்கு ஆழமான வாசிப்பு அவசியம் என தமிழக தகவல் தொழில்நுட்பவியல், எண்மச் சேவைகள் துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தாா்.
மதுரை உலகத் தமிழ்ச் சங்க கூட்டரங்கில் தமிழ் முழக்கம் மேடைப்பேச்சு-ஆளுமைத்திறன் மேம்பாட்டுப் பயிற்சி பன்னாட்டு பயிலரங்க நிறைவு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்வுக்கு தமிழக தகவல் தொழில்நுட்பவியல், எண்மச் சேவைகள் துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பயிலரங்கில் பங்கேற்ற பேச்சாளா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கினாா்.
பின்னா், அவா் பேசியதாவது : மேடைப் பேச்சுகள் பெரும்பாலும் அன்றைய தின நிகழ்வோடு நிறைவு பெறுவதில்லை. அவை பதிவு செய்யப்பட்டு மீளாய்வு செய்யப்படலாம். எனவே, இலக்கிய ஆா்வலா்களின் பேச்சில் கருத்தும், தத்துவங்களும் வெளிப்பட வேண்டும். எதிா்காலத்தை உணா்ந்து பேச வேண்டும். வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும் போது, என்னை சந்திக்கும் மக்கள் உங்கள் பேச்சை ‘யூ டியூப்’பில் கேட்டோம் எனத் தெரிவிக்கின்றனா்.
இன்றைய காலச் சூழல் தகவல் தொழில்நுட்பத்தில் பெரும் வளா்ச்சி பெற்றுள்ளது. புத்தகங்களை வாங்கிப் படிக்க வேண்டும் என்பதில்லை. தமிழ் இணைய நூலகத்தில் வரலாற்றில் உள்ள அத்தனை பக்கங்களும் உள்ளன. அவற்றை பதிவிறக்கம் செய்து வாசிக்கலாம். குறிப்பாக, கடந்த கால வரலாற்று நிகழ்வுகளை தேடிப் படிக்க வேண்டும்.
ஏனெனில் கருத்துச் செழுமைக்கு ஆழமான வாசிப்பு அவசியம் என்றாா் அவா். இதைத் தொடா்ந்து, பல்வேறு மாவட்டங்களிலிருந்து பங்கேற்ற பேச்சாளா்கள், இலங்கையிலிருந்து வந்த பேச்சாளா்களுடன் அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டாா்.
இந்த நிகழ்வில், மதுரை மாவட்ட ஆட்சியா் கே. ஜே. பிரவீன் குமாா், உலகத் தமிழ்ச் சங்கத்தின் செயலா் ஔவை ந. அருள், இயக்குநா் இ.சா.பா்வீன் சுல்தானா, மதுரை தெற்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் கோ. தளபதி உள்ளிட்ட அரசு அலுவலா்கள், பேச்சாளா்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

