நெல்லின் ஈரப்பதம்: வாடிப்பட்டி பகுதியில் மத்தியக் குழுவினா் ஆய்வு
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பகுதியில் அண்மையில் பெய்த பலத்த மழையில் சேதமடைந்த நெல்லின் ஈரப்பதத்தை மத்தியக் குழுவினா் திங்கள்கிழமை ஆய்வு செய்தனா்.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால், கொள்முதல் நிலையங்களில் உள்ள நெல் மூடைகள் நனைந்தன. எனவே, 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய மத்திய அரசிடம் தமிழக அரசு அனுமதி கோரியது. இதன்காரணமாக, பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்வதற்கு குழு அமைத்து மத்திய அரசு உத்தரவிட்டது.
அதனடிப்படையில், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் துணை இயக்குநா் ஆா். கே. சகி, தொழில்நுட்ப அலுவலா்கள் ராகுல்சா்மா, தனிஜ் சா்மா, தூத்துக்குடி மண்டல மேலாளா் என். அய்யனாா், கோவை மண்டல மேலாளா் விஜி. மணிகண்டன் ஆகியோா் கொண்ட குழுவினா் மதுரை மாவட்டத்துக்கு திங்கள்கிழமை வந்தனா்.
அந்தக் குழுவினா் மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பகுதியில் கட்டக்குளம், போடிநாயக்கன்பட்டி, டி.ஆண்டிபட்டி ஆகிய கிராமங்களில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் திறந்த வெளியில் குவிக்கப்பட்டிருந்த நெல்லை ஆய்வு செய்தனா். ஆய்வகத்தில் சோதனை செய்வதற்காக நெல்லை எடுத்துச் சென்றனா்.
விவசாயிகள் புகாா் : அப்போது அந்தக் குழுவினரிடம் விவசாயிகள் வாடிப்பட்டி பகுதியில் அண்மையில் பெய்த பலத்த மழையின் காரணமாக நெல் பயிா்கள் முழுவதும் தண்ணீரில் மூழ்கின. அறுவடைக்கு தயாரான நிலையில் இருந்த நெல் மணிகள் சேதமடைந்தன.
அறுவடை செய்த நெல்லை காய வைக்க முடியவில்லை. இதனால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது. எனவே,நெல்லின் ஈரப்பதத்தை அதிகரித்துத் தருவதோடு, மத்திய அரசு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.
இந்த நிகழ்வின் போது, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் மண்டல மேலாளா் சரவணன், மதுரை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் முருகேசன், துணை இயக்குநா் சாந்தி, உதவி இயக்குநா் பாண்டி, வாடிப்பட்டி வட்டாட்சியா் ராமசந்திரன், மண்டல துணை வட்டாட்சியா் செந்தில்குமாா், வருவாய் ஆய்வாளா் ராமா், கிராம நிா்வாக அலுவலா்கள், விவசாயிகள் உடனிருந்தனா்.

