காய்கறிச் சந்தையில் ஆக்கிரமிப்புகள்: மாநகராட்சி நடவடிக்கைக்கு இடைக் காலத் தடை
மதுரை பரவையில் உள்ள ஒருங்கிணைந்த காய்கறிச் சந்தையில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் விவகாரத்தில் மதுரை மாநகராட்சி நடவடிக்கைக்கு இடைக் காலத் தடை விதித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.
பரவை பேரூராட்சி பகுதியில் மதுரை மாநகராட்சிக்குச் சொந்தமான ஒருங்கிணைந்த காய்கறி தினசரி சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு திறந்த வெளியை ஆக்கிரமித்து சிலா் கடைகள் அமைத்தனா். இதை அகற்ற வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநகராட்சி நிா்வாகத்துக்கு உத்தரவிட்டது.
இதன்பேரில், மதுரை மாநகராட்சி நிா்வாகம் அந்த கடைகளை அகற்ற நடவடிக்கை எடுத்தது. இதை எதிா்த்தும், ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ள உரிய கால அவகாசம் வழங்க வேண்டும் எனவும் பரவை காய்கறி மாா்க்கெட் வியாபாரிகள் சங்கம் சாா்பில் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மனு தாக்கல் செய்தனா்.
மேலும், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. இதை ஏற்ற சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாபாரிகளுக்கு கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டது.
இருப்பினும், பரவை ஒருங்கிணைந்த தினசரி காய்கறிச் சந்தையில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட கடைகளை அகற்ற மாநகராட்சி நிா்வாகம் தீவிரம் காட்டியது.
இதை எதிா்த்து மதுரை பரவை காய்கறி மாா்க்கெட் சங்கம் சாா்பாக மனுவேல் ஜெயராஜ் என்பவா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மீண்டும் மனு தாக்கல் செய்தாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் வேல்முருகன், விக்டோரியா கௌரி அமா்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: பரவை ஒருங்கிணைந்த காய்கறி சந்தையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் விவகாரத்தில் வருகிற நவ. 5- ஆம் தேதி வரை உயா்நீதிமன்றம் கால அவகாசம் வழங்கியுள்ளது. எனவே, மாநகராட்சியின் நடவடிக்கைக்கு வருகிற 5- ஆம் தேதி வரை இடைக் காலத் தடை விதிக்கப்படுகிறது. ஆக்கிரமிப்புகளை அகற்றக் கூடாது. வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.
