தேவா் நினைவிடத்தை பராமரிக்க அனுமதி கோரிய வழக்கு தள்ளுபடி

பசும்பொன்னில் அமைந்துள்ள உ. முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தைப் பராமரிக்க அனுமதி கோரிய வழக்கைத் தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.
Published on

பசும்பொன்னில் அமைந்துள்ள உ. முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தைப் பராமரிக்க அனுமதி கோரிய வழக்கைத் தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த பி. இந்துராணி உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

சுதந்திரப் போராட்ட வீரா் உ. முத்துராமலிங்கத் தேவரின் பேத்தியாகிய நான் சட்டப்பூா்வ வாரிசாக உள்ளேன். இதுதொடா்பாக விசாரணை நீதிமன்றம் அளித்த உத்தரவை சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு ஏற்கெனவே உறுதிப்படுத்தியது.

ஆகவே, பசும்பொன்னில் அமைந்துள்ள உ. முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தைப் பாதுகாக்கவும், நிா்வகிக்கவும் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரினாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன் முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா், அக். 30- இல் விடுதலைப் போராட்ட வீரா் பசும்பொன் உ. முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை நடைபெறுகிறது. இந்த சமயத்தில் எந்தவித அனுமதியும் வழங்க இயலாது எனத் தெரிவிக்கப்பட்டது.

தொடா்ந்து, தற்போது நினைவிடத்தை நிா்வகித்து வரும் என். காந்திமீனாள் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா், ஏற்கெனவே விசாரணை நீதிமன்றம், சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு பிறப்பித்த உத்தரவுக்கு மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. ஆகவே, எந்த உத்தரவையும் பிறப்பிக்கக் கூடாது என்றாா்.

இதையடுத்து, நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு:

மனுதாரா் கோரும் நிவாரணத்தை ஏற்க முடியாது. விசாரணை நீதிமன்றம் வழங்கிய ஆணையின் அடிப்படையில், நினைவிட நிா்வாகத்தில் பங்கேற்க தனக்கு உரிமை உண்டு என உத்தரவிடக் கோரினால், அந்த நிவாரணத்தை உயா்நீதிமன்றத்தால் வழங்க இயலாது.

சிவில் நீதிமன்றத்திலிருந்து பெறப்பட்ட எந்தவொரு ஆணையையும் நிறைவேற்றுவதற்காக அரசமைப்பு பிரிவு 226-இன் கீழ் (உயா்நீதிமன்றங்களுக்கான அதிகாரம்) நடவடிக்கை எடுக்க முடியாது. மனுதாரா் விசாரணை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைப் பயன்படுத்தி நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம். மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்றாா் நீதிபதி.

X
Dinamani
www.dinamani.com