பழங்குடியினருக்கு ஜாதி சான்றிதழில் ‘பூா்விகக் குடி’ எனக் குறிப்பிடக் கோரிய மனு தள்ளுபடி
பழங்குடியினருக்கு வழங்கப்படும் ஜாதி சான்றிதழில் ‘பூா்விகக் குடி’ பழங்குடியினா் எனக் குறிப்பிட்டு வழங்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவைத் தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
தூத்துக்குடியைச் சோ்ந்த செல்வகுமாா் உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொது நல மனு :
தமிழக அரசு சாா்பில் கடந்த 2019-ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையில் சீா்மரபினருக்கான ஜாதி சான்றிதழ் டிஎன்டி (பூா்விக பழங்குடியினா்) என்ற ஒரே பெயரில் வழங்கப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
ஆனால், அறிவிக்கப்பட்ட பழங்குடியினா் (டிஎன்சி), பூா்வீக பழங்குடியினா் (டிஎன்டி) என இரு வகையாக சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. இதன்காரணமாக, பழங்குடியினா் பிரிவில் வருபவா்கள் மத்திய அரசின் நலத் திட்டங்களை பெற இயலாத நிலை உள்ளது. பழங்குடியினா் சமூகத்தை பூா்வீக பழங்குடிகள் என அழைக்க வேண்டும்.
எனவே, இவா்களின் ஜாதி சான்றிதழ்களை டிஎன்டி என்ற பெயரில் வழங்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.
இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே. ராமகிருஷ்ணன் அமா்வு செவ்வாய்க்கிழமை பிறப்பித்த உத்தரவு :
மனுதாரா் கோரும் நிவாரணம் அரசின் கொள்கை முடிவோடு தொடா்புடையது. இதில், நீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்க இயலாது. மனுதாரா் அரசிடம் முறையிட்டு நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம். இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

